சுவையான கத்திரிக்காய் காரக்குழம்பு செய்வதற்கான ஈஸியான ஸ்டெப்ஸ்களை இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய்
சுண்ட வத்தல் - 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
கருவேப்பிலை
சின்ன வெங்காயம் - 10
பச்ச்சை மிளகாய் - 3
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
கத்தரிக்காய் - 1/4 கிலோ
மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 3 டேபிள் ஸ்பூன்
கல் உப்பு - தேவையான அளவு
புளி - தேவையான அளவு
நீங்கள் செய்ய வேண்டியவை
ஒரு கனமான பாத்திரம் எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு அதில் சுண்ட வத்தல் சேர்த்து நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின்னர் அதே எண்ணெயில் சீரகம், வெந்தயம், கருவேப்பிலை போன்றவற்றை சேர்க்கவும். அவை பொறிந்து வந்ததும் அவற்றோடு சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை அவற்றோடு சேர்த்து வதக்கவும்.
இப்போது நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயை அதில் சேர்த்து வதக்கவும். அவை நன்கு வதங்கியதும், அவற்றோடு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.இப்போது தனியாக ஊறவைத்துள்ள புளியை கரைத்து அவற்றோடு சேர்த்துக்கொள்ளலாம். அதோடு தேவையான அளவு தண்ணீரும் சேர்த்துக்கொள்ளவும். பின்னர் பாத்திரத்தை ஒரு மூடியால் மூடி கொதிக்க விடவும்.
இவை நன்கு கொதித்து வந்த பிறகு முன்பு வறுத்து வைத்துள்ள சுண்ட வத்தலை சேர்க்கவும். சுவைக்கு இவற்றோடு வெல்லம் அல்லது தேங்காய் பேஸ்ட் சேர்த்துக்கொள்ளவும். பிறகு சில நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து கீழே இறக்கினால் சுவையான கத்திரிக்காய் காரக்குழம்பு தயாராக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“