ஏழை மாணவர்கள் கல்வி கற்க எத்தனையோ வசதிகளை, நம்முடைய அரசு செய்து தருகிறது. இதனால், அனைவராலும் கல்வி கற்க முடிகிறது. ஆனால், 30, 40 வருடங்களுக்கு முன்பு ஏழ்மை காரணமாக எத்தனையோ பேர் கல்வி கற்க முடியாமல் இருந்தனர்.
பல சிறு குறு கிராமங்களில் உள்ள பள்ளிகள் அடிப்படை வசதிகளை இழந்து அலங்கோலமாக காட்சியளிக்கும் நிலை இன்றளவும் தொடரும் நிலையில், பெரம்பலூர் அருகே கிராமப்புற அரசு பள்ளி ஒன்றை அப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் ரூ.2 கோடியே 15 லட்சம்
செலவில், தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் மேம்படுத்தி கொடுத்துள்ளது பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது குறித்த விபரம் வருமாறு, பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நடுநிலைப் பள்ளியாக இருந்து கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் 1980-ல் உயர்நிலைப் பள்ளி என தரம் உயர்த்தப்பட்ட இந்தப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்வரை 500 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்துள்ளனர்.
ஆனால் குடிநீர்வசதி , கழிவறை மற்றும் சுற்றுச்சுவர் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை
வசதிகள் மேம்படுத்தப்படாததினால் இக்கிராமத்திலுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வெளியூரிலுள்ள தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப தொடங்கியதால் படிப்படியாக மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறையத்தொடங்கி தற்போது வெறும் 160 மாணவ, மாணவிகளே இங்கு பயின்று வரும் நிலை உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி திட்டத்தின் மூலம் தற்போது லாடபுரம் பள்ளியை அனைத்து அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தி தந்துள்ளார் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரான அருள்மணி என்பவர்.
சென்னையில் வெரிடாஸ் பவுண்டேசன் என்ற நிதிநிறுவனம் நடத்தி வரும் அருள்மணி தனது உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சொந்த கிராமமான லாடபுரத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் தான் பயின்ற அரசுப்பள்ளி அடிப்படை வசதி இன்றி
இருப்பதை கண்டு, தான் பயின்ற பள்ளியை தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ள நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி திட்டத்தின் மூலம் மேம்படுத்த மாவட்ட நிர்வாகத்தை அணுகினார்.
அதன்படி ஒரு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. சுமார் ரூ.2 கோடியே 10 லட்சம் திட்ட மதிப்பீடு தயாரித்த அவர் பள்ளிக்கல்வித்துறையினரின் ஒத்துழைப்புடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புணரமைப்பு பணியை தொடங்கியுள்ளார்.
சிதிலமடைந்த பள்ளி மேற்கூரைகளை அகற்றி புதிதாக வடிவமைத்ததோடு பள்ளி சுற்றுச்சுவர், விழா மேடைக்கான கலையரங்கம் மற்றும் ஆய்வகம், நவீன குடிநீர் சாதனம் மற்றும் கழிவறைகளையும் அமைத்து தந்துள்ளார்.
மேலும் மாணவ மாணவிகளின் பாதுகாப்பினை உறுதிபடுத்திட பள்ளியை சுற்றி 10 -க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு (CCTV) கேமிரா, கண்கவர் கார்டன் என சர்வதேச தரத்தில் பள்ளியை மேம்படுத்தி தந்துள்ளார்.
பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானம், காய்கறி தோட்டம் என லாடபுரம் அரசுப்பள்ளி தனியார் பள்ளிகளுக்கு இணையாக இப்போது சோலைவனம்போல காட்சி அளிக்கிறது.
தற்போது பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி கிரேஸ் பச்சாவ் மேம்படுத்தப்பட்ட அரசுப்பள்ளி வகுப்பறைகளை திறந்து வைத்து அரசுப்பள்ளியை மேம்படுத்தி தந்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்ததோடு. மாணவ மாணவிகளுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.
தான் படித்த அரசு பள்ளியை மேம்படுத்தியது குறித்து தெரிவித்த அருள்மணி; நான், 1976ல் லாடபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். ஊருக்கு வந்தபோது, பள்ளி குறித்தும், அதில் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்தும் உறவினர்கள் வாயிலாக அறிந்தேன்.
என் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து, பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தேன். குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் உள்ள ஐ.ஆர்.எம்.ஏ., இன்ஸ்டிடியூட்டில் எம்.பி.ஏ., பட்டம் பெற்றுள்ளேன்.
நான் வாழ்வில் உயர்ந்ததற்கு அடித்தளமாக இருந்தது இந்த ஆரம்பப் பள்ளி தான். படித்த பள்ளிக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்ததை பாக்கியமாக நினைக்கிறேன். இதில், பாராட்டும் அளவுக்கு ஒன்றும் இல்லை.
அரசு பள்ளிகளையும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தனது நிறுவனத்தின் மூலம் உயர்த்த முடிவு செய்து முதலில் தான் படித்த அரசுப் பள்ளியில் இருந்து தொடங்க முடிவு செய்து அதனை மேம்படுத்திட நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி (NSNOP) திட்டத்தின் மூலம் 2 கோடியே 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பள்ளியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து முடிக்கப்பட்டுள்ளதோடு, தனியார் பள்ளிகளைவிட தற்போது நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பள்ளி மாணவ மாணவிகள் கல்வி கற்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இப்பள்ளியை தொடர்ந்து மேலும் இது போன்ற அடிப்படை வசதிகள் இன்றி உள்ள அரசு பள்ளிகளை கண்டறிந்து அதனை தொடர்ந்து தனது நிறுவனத்தின் மூலம் மேம்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இவரைப் போன்று ஒவ்வொரு அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவனும், தான் படித்த அரசு பள்ளியின் நிலையறிந்து அங்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன் வந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயரும் என்றால் அது மிகையல்ல.
க.சண்முகவடிவேல்