/indian-express-tamil/media/media_files/2025/04/23/5x0CfrQaU2S737RjeY5h.jpg)
பழங்கள் முதல் பதப்படுத்தப்பட்ட உணவுகள் வரை - பல அன்றாட உணவுகளில் உள்ள கலோரி உள்ளடக்கத்தைப் பற்றி முன்பு விவாதித்தோம். ஆனால், ஒரு ஸ்பூன் எண்ணெயில் எவ்வளவு கலோரிகள் இருக்கலாம் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
ஆங்கிலத்தில் படிக்கவும்: From olive to canola: Here’s how many calories 1 tablespoon of oil has
ஒவ்வொரு விதமான எண்ணெய்யிலும் அதன் பயன்பாடுகளை பொறுத்து கலோரிகள் இருக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
"சில எண்ணெய்களில் அதிகப்படியான கலோரிகள் உள்ளன. உதாரணத்திற்கு, 120 முதல் 130 கலோரிகள் வரை ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்யில் இருக்கிறது" என்று உணவியல் நிபுணர் ஜினல் படேல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய் போன்றவற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் சமையலுக்கு எண்ணெய் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என உணவியல் நிபுணர் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். மேலும், பெரியவர்கள் நாள் ஒன்றுக்கு 30 மில்லி லிட்டர் (2 டேபிள் ஸ்பூன்) வரை எண்ணெய் எடுத்துக் கொள்ளலாம் என்று வழிமுறை இருப்பதாக அவர் கூறுகிறார். "இந்தப் பரிந்துரையானது கொழுப்புகளிலிருந்து சுமார் 250-260 கலோரிகளை உள்ளடக்கியது. எண்ணெய்கள், நெய், வெண்ணெய் மற்றும் பருப்புகள் உட்பட அனைத்து உணவுக் கொழுப்பு மூலங்களையும் உள்ளடக்கியது. இருப்பினும், அளவு மட்டுமல்ல, பயன்படுத்தப்படும் எண்ணெய்களின் தரத்திலும் கவனம் செலுத்துவது அவசியம்" என்று மல்ஹோத்ரா கூறினார்.
ஆலிவ், தேங்காய் மற்றும் கனோலா போன்ற எண்ணெய்கள் ஒரு டேபிள் ஸ்பூனுக்கு சுமார் 120 கலோரிகளைக் கொடுக்கக்கூடும் என்று படேல் கூறினார்.
அனைத்து எண்ணெய்களும் அத்தியாவசிய கொழுப்புகளை வழங்கினாலும், கொழுப்பின் வகை முக்கியமானது என்று படேலும் குறிப்பிட்டார். "ஆலிவ் எண்ணெய் போன்ற எண்ணெய்களில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளன. அவை, இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும், தேங்காய் எண்ணெயில் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. நிபுணர்கள் பரிந்துரைத்த எண்ணெய்யை பயன்படுத்துவது நல்லது" என்று படேல் கூறினார்.
அதிகமாக எண்ணெய்யில் வறுத்த உணவுகளை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை எடுத்துக் கொள்வது என்ற வகையில் கட்டுப்படுத்த வேண்டும். "இது எண்ணெய் நுகர்வைக் குறைப்பது மட்டுமல்லாமல், வறுத்த உணவுகளுடன் தொடர்புடைய ஆரோக்கியமற்ற கொழுப்பு உட்கொள்ளலைக் குறைக்கிறது. பலவிதமான எண்ணெய்களைப் பயன்படுத்துவது உங்கள் உணவில் கொழுப்பு அமிலங்களின் சீரான உட்கொள்ளலை அடைய உதவும். உதாரணமாக, கடுகு மற்றும் தேங்காய் எண்ணெயை இணைப்பது சுவை மற்றும் ஊட்டச்சத்து நன்மைகளை அதிகரிக்கும். எனவே, புத்திசாலித்தனமாக எண்ணெய்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்" என்று மல்ஹோத்ரா கூறினார்.
நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருந்தால், உங்கள் கலோரி அளவைக் கருத்தில் கொண்டு, எந்த எண்ணெய் நுகர்வுக்கு மிகவும் பொருத்தமானது என்பதைத் தீர்மானிக்க ஒரு நிபுணரை அணுகுவது கட்டாயமாகும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.