/indian-express-tamil/media/media_files/2025/08/09/instant-noodles-2025-08-09-16-11-48.jpg)
இன்ஸ்டென்ட் நூடுல்ஸ் Vs ஆரோக்கியம்: நூடுல்ஸை ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி?
இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மலிவானது, விரைவாக செய்யக்கூடியது. மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், குடும்பத்தினர் மற்றும் பட்ஜெட்டுக்குள் சமைக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வு. ஆஸ்திரேலியாவில், உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஆசிய உணவு வகைகளின் புகழ் அதிகரிப்பு காரணமாக இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சந்தை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால், தினசரி உணவாக சாப்பிட்டால் என்ன ஆகும்? நூடுல்ஸை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ முடியுமா, அதுவும் ஆரோக்கியமாக? சாதாரண நூடுல்ஸ் பாக்கெட்டில் என்ன உள்ளது? அது நமது உடல் நலத்தை எப்படிப் பாதிக்கிறது, அதை எப்படி ஆரோக்கியமான உணவாக மாற்றுவது என்பது குறித்து பார்க்கலாம்.
ஏன் நூடுல்ஸ் இவ்வளவு பிரபலமானது?
நூடுல்ஸ் மிக எளிதில் கிடைக்கக்கூடிய உணவு. ஒரு பாக்கெட் விலை மிகவும் குறைவு, சில நிமிடங்களில் தயார் செய்துவிடலாம், பசி அடங்கும். சேமித்து வைக்க எளிதானது, நீண்ட நாட்கள் கெடாது, அனைத்து கடைகளிலும் கிடைக்கும். அத்துடன், பலருக்கு இது கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த உணவாகவும் உள்ளது. வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள், புலம்பெயர்ந்தவர்களுக்கு இது புதிய இடத்தில் பரிச்சயமான சுவையை அளிக்கிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ஒரு கிண்ணம் மேகி, ஷின் ரம்யூன் அல்லது இண்டோமி நூடுல்ஸ், அவர்களைப் பழைய நினைவுகளான குழந்தைப் பருவம், பரபரப்பான இரவுச்சந்தை அல்லது நண்பர்களுடன் உண்ட உணவகங்களுக்கு அழைத்துச் செல்லும். இது வெறும் விரைவான உணவு மட்டுமல்ல; அது நினைவுகளையும், அடையாளத்தையும், சொந்த ஊர் உணர்வையும் உள்ளடக்கியது.
ஒரு பாக்கெட் நூடுல்ஸில் என்ன உள்ளது?
இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் ஆறுதல் அளித்தாலும், அதன் ஊட்டச்சத்து மதிப்பு குறைவாக உள்ளது. ஒருசாதாரண நூடுல்ஸ் பாக்கெட் கோதுமை மாவு நூடுல்ஸ் மற்றும் சுவை சேர்க்கும் பொடியை கொண்டது. சில பாக்கெட்டுகளில் காய்கறிகள், வறுத்த பூண்டு போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால், பெரும்பாலான நூடுல்ஸ் பாக்கெட்டுகளில் உப்பு மிக அதிகமாக இருக்கும். ஒருவேளை உணவில் 600–1,500 மி.கி. சோடியம் இருக்கலாம். உலக சுகாதார நிறுவனம் ஒரு நாளைக்கு 2,000 மி.கி. சோடியம் மட்டுமே எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கிறது. இதைக் கணக்கிடும்போது நூடுல்ஸில் சோடியத்தின் அளவு அதிகமாகவே உள்ளது.
அதிகப்படியான சோடியம் இதயம் மற்றும் சிறுநீரகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம். நூடுல்ஸ் சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவிலிருந்து செய்யப்படுவதால், இதில் நார்ச்சத்து குறைவாக இருக்கும். நார்ச்சத்து செரிமானத்தை சீராக வைத்துக்கொள்ளவும், குடல் ஆரோக்கியத்திற்கு அவசியம். மேலும், இன்ஸ்டன்ட் நூடுல்ஸில் புரதம் குறைவாக உள்ளது. நூடுல்ஸில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உங்களைச் சாப்பிட்டவுடன் நிறைவாக உணர வைத்தாலும், புரதச் சத்து இல்லாததால் (முட்டை, டோஃபு அல்லது இறைச்சி சேர்க்கவில்லை என்றால்), அந்தப் பசி விரைவில் மீண்டும் வந்துவிடும். அத்துடன், இதில் வைட்டமின்கள், தாது உப்புகள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்களும் குறைவாகவே உள்ளன.
தினமும் நூடுல்ஸ் - ஆரோக்கியப் பிரச்னைகள்:
எப்போதாவது நூடுல்ஸ் சாப்பிடுவது உங்களுக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாது. ஆனால், இதுவே உங்கள் முக்கிய உணவாக இருந்தால், அது நீண்டகால உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. தென்கொரியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், வாரத்திற்கு 2 முறைக்கு மேல் நூடுல்ஸ் சாப்பிடுபவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, வளர்சிதை மாற்ற நோய்க்குறி (metabolic syndrome) ஏற்படும் ஆபத்து அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வளர்சிதை மாற்ற நோய்க்குறி என்பது, இதய நோய், நீரிழிவு நோய் போன்ற பல உடல்நலப் பிரச்னைகளின் அபாயத்தை அதிகரிக்கும் நோய்களின் தொகுப்பாகும்.
இந்த ஆய்வு நூடுல்ஸால் நேரடியாக இந்தப் பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று கூறவில்லை. ஆனால், நாம் தொடர்ந்து சாப்பிடும் உணவு நமது ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பதை காட்டுகிறது. அதிக உப்பு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. நூடுல்ஸில் உள்ள அதிக சோடியம் காரணமாகவே இது வளர்சிதை மாற்ற நோய்க்குறியுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிக சோடியத்தைச் சாப்பிடுகிறார்கள்.
குறைவான நார்ச்சத்து உள்ள உணவு, குடல் ஆரோக்கியக் குறைபாடு, மலச்சிக்கல், டைப் 2 நீரிழிவு, குடல் புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்துடன் தொடர்புடையது. மேலும், உணவில் பலவகைகள் இல்லாததால், காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் முழு தானியங்களில் காணப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நாம் இழக்க நேரிடும். இந்த ஊட்டச்சத்துக்கள் நீண்டகால ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை.
நூடுல்ஸை ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி?
உங்கள் உணவில் நூடுல்ஸ் அதிகமாக இருந்தால், அவற்றைக் கைவிட வேண்டியதில்லை. சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதை ஆரோக்கியமான உணவாக மாற்றலாம். ஒரு கைப்பிடி உறைந்த பட்டாணி, கீரை, ப்ரோக்கோலி, கேரட் அல்லது கையில் இருக்கும் வேறு எந்தக் காய்கறிகளையும் சேர்க்கலாம். இது நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் சுவையை அதிகரிக்கும். அவித்த அல்லது வறுத்த முட்டை, டோஃபு துண்டுகள், சோயாபீன்ஸ், எலும்பில்லாத கோழி இறைச்சி அல்லது டின்னில் அடைக்கப்பட்ட பீன்ஸ் போன்றவற்றைச் சேர்க்கலாம். இது உங்களை நீண்ட நேரம் பசியின்றி வைத்திருக்க உதவும்.
நூடுல்ஸ் பாக்கெட்டில் உள்ள பொடியில்தான் அதிக உப்பு இருக்கும். எனவே, பாக்கெட்டில் உள்ள பொடியில் பாதி அல்லது அதற்கும் குறைவாகப் பயன்படுத்துங்கள். அதற்கு பதிலாக, குறைந்த சோடியம் கொண்ட ரசம், பூண்டு, இஞ்சி, மூலிகை அல்லது மிளகாயை சேர்த்துக்கொள்ளலாம். தற்போது சில பிராண்ட் பக்வீட், பழுப்பு அரிசி அல்லது தினை போன்றவற்றால் செய்யப்பட்ட அதிக நார்ச்சத்து கொண்ட நூடுல்ஸ் வகைகளை வழங்குகின்றன. பாக்கெட்டின் பின்புறம் உள்ள தானியத்தின் மூலப்பொருளைப் பார்த்துத் தேர்வு செய்யலாம்.
நூடுல்ஸை முழுமையாகத் தவிர்க்க வேண்டுமா?
நிச்சயமாக இல்லை. பெரும்பாலான உணவுகளைப் போலவே, நூடுல்ஸும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்குள் பொருந்தும். ஆனால், அதுவே ஒவ்வொரு நாளும் முக்கிய உணவாக இருக்கக் கூடாது. உங்கள் உடலை ஒரு காரைப் போல நினைத்துப் பாருங்கள். நூடுல்ஸ் என்பது, உங்களை நகர்த்துவதற்குப் போதுமான எரிபொருள் மட்டுமே. ஆனால், காரின் எஞ்சினை நீண்ட காலம் சீராக இயக்க போதாது. வேலைப்பளு நிறைந்த வாழ்க்கையிலும், பலவிதமான உணவுகளைச் சமைக்கும்போதும், நூடுல்ஸுக்கென்று ஒரு இடம் உண்டு. சில எளிதான மாற்றங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைச் சேர்ப்பதன் மூலம், வசதியையும் இழக்காமல், ஊட்டச்சத்துக்களையும் அதிகரிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.