New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/07/CPlMZT63aonSOmZWPml9.jpg)
PCOS பிரச்சினை உள்ள பெண்கள் இயற்கையாக கருத்தரிக்க முடியுமா? டாக்டர்கள் கூறுவது என்ன?
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்பது பெண்களுக்கு ஏற்படும் பொதுவான ஹார்மோன் பிரச்னையாகும். இதில், பெண்களின் கருவுறுதல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு, கருப்பைகள் சரியாகச் செயல்படாமல், கர்ப்பம் தரிப்பதில் சிரமம் ஏற்படும். PCOS பெண்களுக்கும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். குறிப்பாக இளம் பெண்களிடையே அதிகமாக உள்ளது.
தங்களுடைய முதல் மாதவிடாய் சுழற்சியை அடைந்த பின் அல்லது கருத்தரிக்க முயற்சித்து வரும் பெண்களை இது பாதிக்கலாம். ஹார்மோன் சம்பந்தப்பட்ட கோளாறுகளில் PCOS பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் கருத்தரிப்பதில் பெண்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். PCOS இருப்பதால் மட்டுமே ஒரு பெண்ணால் கருத்தரிக்க இயலாது என்று சொல்லிவிட முடியாது. PCOS ஆல் பாதிக்கப்பட்டுள்ள பல பெண்கள் கருத்தரித்துள்ளனர். ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்கள், மருத்துவ உதவி மற்றும் மன ரீதியான பராமரிப்பு மூலமாக PCOS இருந்தால் கூட ஆரோக்கியமான கர்ப்பம் அடையலாம். அதற்கான சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
Advertisment
சரிவிகித உணவு என்பது பல்வேறு உடல்நல பிரச்னைகளை நம்மிடம் இருந்து தூரவைக்கும். இது PCOS பிரச்சனைக்கும் பொருந்தும். முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கிய சரிவிகித உணவை சாப்பிடுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரைகளை முடிந்த அளவு குறைத்துக் கொள்ளுங்கள். உடனடி ரத்த சர்க்கரை அதிகரிப்பை ஏற்படுத்தாத குறைந்த கிளேசிமிக் எண் கொண்ட உணவுகள், மெதுவாக செரிமானமாகும் உணவுகளை PCOS ஆல் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் சாப்பிடுவது பயனுள்ளதாக அமையும்.
வாழ்க்கை முறை மாற்றங்களோடு சேர்த்து இனப்பெருக்கத்தை தூண்டும் மருந்துகளும் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே மருத்துவர்களை ஆலோசித்து ஓவுலேஷன் செயல்முறையை தூண்டுவதற்கான மருந்துகளை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். அதுதவிர இன்ட்ரா யூட்டரின் இன்செமினேஷன் (IUI) அல்லது இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன் (IVF) போன்றவற்றை முயற்சித்து பார்க்கலாம்.
PCOS பிரச்னையை நிர்வகிப்பதற்கும், இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியமான உடல் எடை மிக அவசியம். எனவே உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள். ஏனெனில் உடல் எடை அதிகமாக இருப்பது இன்சுலின் எதிர்ப்பு திறனை பாதிக்கலாம். அதன் விளைவாக ஹார்மோன் சமநிலையின்மை, கருமுட்டை வெளிவரும் ஓவுலேஷன் செயல்முறை பாதிக்கிறது.
உடற்பயிற்சி செய்வது உடல் எடையை நிர்வகிப்பதற்கு மட்டுமல்லாமல் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதற்கும், ஹார்மோன்களை சமநிலையாக வைப்பதற்கும் உதவுகிறது. இரண்டுமே PCOS பிரச்சனையை நிர்வகிப்பதற்கு உதவியாக இருக்கும். எனவே தினமும் காலையில் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், ஏரோபிக்ஸ் அல்லது ஜூம்பா போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள். குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது ஒரு வாரத்திற்கு 4 நாட்கள் என்ற வீதம் உடற்பயிற்சி செய்யுங்கள். உங்களுடைய மன அழுத்தத்தை குறைத்து, மனநிலையை மேம்படுத்தி, இனப்பெருக்க ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
சீரற்ற முறையில் ஓவுலேஷன் நடைபெறுவது PCOS உடன் கருத்தரிக்க முயற்சி செய்யும் பல பெண்களுக்கு பிரச்னையாக இருக்கிறது. எனவே உங்களுடைய மாதவிடாய் சுழற்சியை தொடர்ந்து கண்காணித்து, கருத்தரிப்பதற்கு அதிக சாத்தியங்கள் இருக்கக்கூடிய நாட்களை கணக்கிட்டு, அதன்படி நடந்து கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் ஃபெர்டிலிட்டி அப்ளிகேஷன்கள், மானிட்டர்கள் போன்ற கருவிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
PCOS பிரச்னையோடு கருத்தரிக்க முயற்சிக்கும் பல பெண்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே உங்களுக்கு தேவையான ஆதரவை பெற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அது உங்களுடைய வாழ்க்கை துணையாக இருக்கலாம் அல்லது நண்பராக இருக்கலாம். இதனை நீங்கள் தனியாக கடந்து போக வேண்டிய அவசியம் கிடையாது. மேலும் பொறுமை மற்றும் விடாமுயற்சி என்பது மிகவும் அவசியம். கருத்தரிப்பதற்கு காலதாமதம் ஆனாலும் உங்களுடைய முயற்சியை கைவிட வேண்டாம். உங்களுடைய உணவில் மாற்றம் செய்வது, உடலை ஃபிட்டாக வைப்பது, மன அழுத்தத்தை குறைப்பது போன்ற ஒவ்வொரு படியாக நீங்கள் எடுத்து வைக்கும் போது நிச்சயமாக வெற்றியை நோக்கிய படியாக இருக்கும் என்று நம்புங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.