டிஜிட்டல் கிரியேட்டர் ஷுப் ஹமிர்வாசியா, அண்மையில் உடல் எடைக் குறைப்பிற்கான டிப்ஸ்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, பசியில் இருக்கும் போது புதினா மிட்டாய்கள் எடுத்துக் கொண்டால், உடல் எடை குறையும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இதில் இருக்கும் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்காக, தலைமை ஊட்டச்சத்து நிபுணர் மீனு பாலாஜியிடம், இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் விளக்கம் கேட்டது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Can snacking on mint when hungry help you lose weight?
"புதினா மிட்டாய்கள் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியாது. இது மற்ற சிற்றுண்டி எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை திசை திருப்புவதற்கு வேண்டுமானால் பயன்படலாம். இதற்கு பதிலாக ஏர் - பாப் செய்யப்பட்ட பாப்கார்ன் அல்லது வறுத்த மக்கானாஸ் சாப்பிடலாம் என நான் பரிந்துரைப்பேன்" என்று மீனு பாலாஜி தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, உடல் எடையைக் குறைப்பதற்கு புதினா மிட்டாய் சாப்பிடுவது ஒரு ஆரோக்கியமான வழி இல்லை எனத் தெரிய வருகிறது. "புதினா மிட்டாய்களில் குறைந்த கலோரிகள் இருப்பதால், அதனை சிறந்த மாற்றாக நீங்கள் கருதலாம். ஆனால் கார்னாபா மெழுகு மற்றும் கம் அரபிக் போன்று அவற்றில் இருக்கும் சில பொருட்கள் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்" என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதினா மிட்டாய்களை எடுத்துக் கொள்வதால் ஆரோக்கியம் மேம்படுமா?
"புதினா மிட்டாய்களை எடுத்துக் கொண்டால் வாய் புத்துணர்ச்சியாக தோன்றும். இதை தவிர அதில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நன்மைகள் இல்லை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "சிறிய துண்டு புதினா மிட்டாய்களை உட்கொள்வது தீங்கு விளைவிக்காது. ஆனால், அதில் இருக்கும் சர்க்கரை மற்றும் டெக்ஸ்ட்ரோஸின் அளவு குறித்து அறியாமல் தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டால், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்" என்றும் மீனு பாலாஜி தெரிவித்துள்ளார்.