சுகாதாரமாக இருப்பது நம் உடல் நலத்திற்கு நன்மையை உண்டாக்கும். குறிப்பாக, நமது கைகளை சுத்தப்படுத்துவது நல்ல பழக்கம் தான். ஆனால், இதனை தொடர்ச்சியாக செய்யும் போது அவை சருமத்திற்கு ஆபத்தாக முடிகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Can washing hands too frequently be unhealthy?
இது தொடர்பாக மருத்துவர் ஃபயாஸ் விளக்கமளித்துள்ளார். அதன்படி, அடிக்கடி கைகளை சுத்தப்படுத்தும் பழக்கம் உளவியல் ரீதியாக ஓசிடியுடன் சம்பந்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். நோய்வாய்ப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் கொண்டவர்கள் அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அடிக்கடி கை கழுவுவது எப்படி சருமத்தை பாதிக்கும்?
அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துவது அல்லது சானிடைசர் பயன்படுத்துவது சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவை வறட்சி தன்மையை ஏற்படுத்தி, சருமத்தை சிவந்து போகச் செய்து, எரிச்சல் வரவைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், கைகளின் பின்புறம் மற்றும் விரல்களில் தடிப்புகள் ஏற்படக் கூடும்.
ஒரு நாளில் எத்தனை முறை கைகளை கழுவலாம்?
“சுகாதாரமாக இருக்கவும், கிருமிகளில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் ஒரு நாளைக்கும் 5 முதல் 10 முறை கைகளை கழுவினாலே போதும். குறிப்பாக சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் கைகளை சுத்தப்படுத்த வேண்டும். கழிப்பறைகளை பயன்படுத்திய பின்னர், இருமல், தும்மல் போன்றவைகளுக்கு பின்னர் கை கழுவ வேண்டும். பொதுப் போக்குவரத்து, கதவின் கைப்பிடிகள் ஆகியவற்றை பயன்படுத்தினால் கட்டாயம் கைகளை கழுவ வேண்டும். பார்ப்பதற்கு அழுக்காக இருக்கும் இடங்களில் நம் கைகளை வைத்தால், நிச்சயம் கைகளை கழுவ வேண்டும்” என மருத்துவர் ஃபயாஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கை கழுவுதல் சரும பிரச்சனைகளை உண்டாக்குகிறது என்றால், கைகழுவுதல் நடைமுறைகளை மறுபரிசீலனை செய்து உங்கள் கைகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கிளிசரின், செராமைடுகள் போன்ற க்ரீம்களை பயன்படுத்தலாம். சரும பிரச்சனை உள்ளவர்கள் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“