சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் – பெரியநாயகி அம்பிகை அம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், 17 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை நடைபெற்றது.
தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபடும் இக்கோயிலில், கடந்த 1998-ம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தேரோட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகு 2002 முதல் 2006 வரை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பாதுகாப்புடன் திருவிழா நடைபெற்றாலும், கும்பாபிஷேகம் மற்றும் தேர் பழுதுபார்ப்பு போன்ற காரணங்களால் இந்நிகழ்வு தொடர்ச்சியாக நடைபெறவில்லை.
2012-ல் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையிலும், தேர் பழுதடைந்ததாகக் கூறி தேரோட்டம் நடத்தப்படவில்லை. தேரோட்டம் நடத்தப்படாததையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இதன் விளைவாக, 2020-ம் ஆண்டு தேரோட்டம் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக அப்போதும் தேரோட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 2024 ஜனவரி 21-ம் தேதி தேரோட்டம் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, பிப்ரவரி 11-ம் தேதி தேரின் வெள்ளோட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, ஜூன் 13-ம் தேதி காப்புக்கட்டும் நிகழ்வுடன் திருவிழா தொடங்கியது. இன்று (ஜூலை 08) காலை 6.45 மணிக்கு தேரோட்டம் அமைதியாகத் தொடங்கியது. சப்பரத்தில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வர் ஆகியோர் முன்னிலை வகிக்க, அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரரின் பெரிய தேரும், பெரியநாயகி அம்பிகையின் சிறிய தேரும் புறப்பட்டன. காலை 8 மணிக்கு இரண்டு தேர்களும் நிலைக்கு வந்தன.
இத்திருவிழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர்கள், தேவஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தென்மண்டல காவல்துறைத் தலைவர் கண்ணன் தலைமையில் 10 காவல் கண்காணிப்பாளர்கள், 12 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 25 துணை கண்காணிப்பாளர்கள், 80 ஆய்வாளர்கள் என மொத்தம் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், கிராமம் முழுவதும் 55 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, விழா முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.