இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான புதிய முறை, விரைவில் நாட்டிலுள்ள பல முன்னணி மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பான தகவல்களை புலிட்சர் பரிசு வென்ற புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் சித்தார்த் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India gets another CAR T-cell therapy to fight blood cancer, will be available in top hospitals: Will costs come down?
கார் டி- செல் சிகிச்சை என்றால் என்ன?
புற்றுநோய் செல்களை உடலில் கண்டறிந்து அவற்றை, நோயெதிர்ப்பு செல்கள் மூலம் அழிக்கும் முறையை கார் டி-செல் சிகிச்சை எனக் கூறுவார்கள். இதற்காக, நோயாளிகளின் நோயெதிர்ப்பு டி-செல்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றை ஆய்வுக் கூடங்களில் சோதனைக்குட்படுத்தி புற்றுநோய் செல்களுடன் இணைக்கும் வழிமுறை நடத்தப்படும். இதற்கான மேம்படுத்தப்பட்ட கருவிகள் இல்லையென்றால், புற்றுநோய் செல்கள் சாதாரண டி-செல்களை எளிதில் தவிர்த்து விட முடியும். இந்த மாற்றியமைக்கப்பட்ட செல்கள் பின்னர் பெருக்கப்பட்டு நோயாளிக்கு உட்செலுத்தப்படுகின்றன.
இந்த சிகிச்சை யாருக்கு அளிக்கப்பட்டுகிறது?
நான்-ஹாட்ஜ்கின் லிம்போமா எனப்படும் ஒரு வகை இரத்தப் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது, அதிகப்படியான வெள்ளை இரத்த அணுக்களை உற்பத்தி செய்யத் தொடங்குவதை குறிக்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 40 ஆயிரத்திற்கும் குறைவான இந்த வகை புற்றுநோய்கள் கண்டறியப்படுவதாகவும், இவற்றில் சுமார் 23 ஆயிரம் வரை மரணங்கள் நிகழ்வதாகவும் உலகளாவிய புற்றுநோய் ஆய்வக தரவுகள் கூறுகின்றன.
இருப்பினும், இந்த சிகிச்சை நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் மேற்கொள்ளப்படுவது இல்லை. இது புற்றுநோய் திரும்பியவர்களுக்கு மற்றும் பிற சிகிச்சைகள் பலன் அளிக்காதவர்களுக்கு அளிக்கப்படும்.
ஸ்பெயினில் இருந்து இந்த சிகிச்சைக்கான உரிமம் பெறப்பட்டுள்ளது. இந்தியாவில் 24 பேருக்கு நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட சோதனையில், 83.3 சதவீத அளவில் முற்றிலும் அல்லது பகுதி அளவு பலனளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சிகிச்சையை எங்கு மேற்கொள்ளலாம்?
சோதனைகள் நடத்தப்பட்ட நாராயண ஹெல்த் நிறுவனம் உள்பட நாட்டின் பல்வேறு முன்னணி மருத்துவமனைகளில் இதனை மேற்கொள்ள முடியும். அப்பல்லோ மருத்துவமனை, வேலூர் சி.எம்.சி மற்றும் லுதியானா, மனிப்பால் மருத்துவமனை, டெல்லியில் உள்ள ராஜிவ் காந்தி புற்றுநோய் மருத்துவமனை, சஞ்சய் காந்தி மருத்துவமனை, ஃபரிதாபாத்தில் உள்ள அம்ரிதா மருத்துவமனை, அகமதாபாத்தில் உள்ள ஹெச்.ஓ.சி வேதாந்தா, பெங்களூரில் உள்ள சைட்கேர், ஸ்ப்ராஷ் மருத்துவமனை ஆகியவற்றில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்?
மற்ற நாடுகளில் மேற்கொள்ளப்படும் கார் டி-செல் சிகிச்சையை ஒப்பிடும் போது, இந்தியாவில் சுமார் ரூ. 35 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை இதற்கு செலவாகும் எனக் கூறப்படுகிறது. இதற்கான கண்டுபிடிப்புகள் வரும் காலத்தில் அதிகரிக்கும் போது இதன் செலவினங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அனோனா தத்
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.