இதய சிகிச்சையில் நவீன தொழில்நுட்பம் சென்னையில் தனியார் மருத்துவமனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 20 வயது இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட மன அழுத்தமே காரணம் என இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்தனர்.
20 வயது இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட மன அழுத்தமே காரணம் என இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்தனர்.
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சையில் அதிநவீன தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சைக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
இதயத்துடிப்பு நின்றவருக்கு மீண்டும் இதயத்துடிப்பை எவ்வாறு கொண்டு வர வேண்டும், மூச்சை எப்படி மீண்டும் செயல்பட செய்ய வேண்டும் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து இருதய நிபுணர்கள் குழு, தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய தொழில்நுட்பத்தால் இருதய சிகிச்சையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என்று தெரிவித்தனர். அத்துடன் முன்பெல்லாம் 60 வயது மதிக்கத்தக்க நபர்களுக்கு வரக்கூடிய மாரடைப்பு என்பது தற்போது 20 வயதிலேயே ஏற்படுகிறது எனக் கூறினர்.
புகைப்பிடிப்பவர்களுக்கு தான் முதலில் மாரடைப்பு ஏற்பட்டது எனவும் ஆனால், தற்போது மன அழுத்தமே மாரடைப்புக்கு முக்கிய காரணமாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டனர்.
நீண்ட நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வேலை பார்ப்பதாலும் மாரடைப்பு ஏற்படுவதாக கூறிய மருத்துவர்கள், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுகள் மூலம் மாரடைப்பை தவிர்க்கலாம் என அறிவுறுத்தினர்.
மேலும், உடற்பயிற்சி கூடத்திற்கு செல்பவர்கள் ஒரே நாளில் அதிக எடைகளை தூக்கி உடற்பயிற்சி செய்வதாலும், புரோட்டின் பவுடர்களை சாப்பிடுவதாலும் ரத்தம் அடர்த்தி அதிகரித்து மாரடைப்பு ஏற்படும் என எச்சரித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“