காலை உணவு, அன்றைய நாளின் மிக முக்கிய உணவாக கருதப்படுகிறது. இது உங்கள் ஆற்றல் நிலைகள் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு பெரிதும் உதவி செய்கிறது. அந்த வகையில் நம்முடைய காலை உணவை சரியாக கட்டமைத்துக் கொள்வது அவசியம். சில உணவுகளை காலை நேரத்தில் சாப்பிடுவது இருதய ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Cardiologist shares 5 most unhealthy breakfast foods
புது டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் இருதய மற்றும் நுரையீரல் மாற்று அறுவை நிபுணரான மருத்துவர் முகேஷ் கோயல், இது தொடர்பான பல்வேறு தகவல்களை பரிந்துரைத்துள்ளார். குறிப்பாக, சில வகையான உணவுகளை காலை நேரத்தில் சாப்பிடும் போது, இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர் கூறுகிறார்.
மேலும், 5 வகையான உணவுகளை காலையில் சாப்பிடக் கூடாது என்று அவர் பரிந்துரைக்கிறார்.
1. அதிக சர்க்கரை கொண்ட காலை உணவு தானியங்கள்: இவற்றை காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு எளிதாக இருப்பதை போன்று தோன்றலாம். ஆனால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை இது விரைவாக அதிகரிக்கும். இது மட்டுமின்றி இன்சுலின் எதிர்ப்பு, வீக்கம் மற்றும் உடல் பருமன் போன்றவற்றுக்கு இது வழிவகுக்கும்.
2. பதப்படுத்தப்பட்ட இறைச்சி பொருட்கள்: பேக்கன், சாசேஜ்கள் போன்ற பொருட்களில் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சோடியம் அதிகம் உள்ளன. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகமாக உட்கொள்வதால், கரோனரி இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது என்று மருத்துவர் கோயல் தெரிவித்துள்ளார். இவை, இருதய நோய் ஏற்படும் வாய்ப்பை பல மடங்கு அதிகரிக்கிறது.
3. பேஸ்ட்ரிகள் மற்றும் டோனட்ஸ்: இந்த வகையான உணவுகளில் டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருக்கிறது. இவை உடலில் இருக்கும் நல்ல கொழுப்புகளை குறைத்து, கெட்ட கொழுப்புகளை கணிசமான அளவு உயர்த்துகின்றன. இதனால், இருதய நோய் உருவாகும் சாத்தியக்கூறு உள்ளது.
4. கொழுப்பு நிறைந்த சீஸ்: இதன் சுவைக்காக பெரும்பாலனவர்கள் இதனை விரும்பினாலும், இதில் இருக்கும் நிறைவுபெற்ற கொழுப்புகள், இருதய நோய் அபாயத்தை பன்மடங்கு அதிகரிக்கும்.
5. செயற்கை சுவையூட்டப்பட்ட பால் அல்லாத க்ரீம் பொருட்கள்: இதில் இருக்கும் செயற்கையான எண்ணெய்கள் மற்றும் சுவையூட்டிகள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும். எனவே, இவற்றை தொடர்ச்சியாக சாப்பிடக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
எனவே, அதிக கொழுப்புகள், சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட உணவுகளை காலை நேரத்தில் தவிர்ப்பது இருதய ஆரோக்கியத்தை உறுதி செய்யும் என்று மருத்துவர் கோயல் அறிவுறுத்துகிறார்.