Carl S Engelbrecht : விண்வெளித்துறையில் மகத்தான சாதனைகளை புரிந்து வரும் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம், கைப்பர் பெல்ட்டில் அமைந்திருக்கும் அல்டிமா துலேவிற்கு விண்கலம் ஒன்றை செலுத்தியது. நொடிக்கு 15 கி.மீ வேகத்தில் விண்ணில் பாய்ந்தது அந்த நியூ ஹொரைசன் விண்கலம். பூமியில் இருந்து சுமார் 4.1 பில்லியன் மைல் தொலைவில் அமைந்திருக்கிறது அல்டிமா துலே.
வெற்றிகரமாக விண்கலம் ஏவப்பட்டதை தொடர்ந்து மிக்க மகிழ்ச்சியிலும் பெருமையிலும் திளைத்திருக்கிறார்கள் அமெரிக்கர்கள். ஆனால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் கூட மிக பெருமை சேர்க்கும் செயலாக அமைந்திருக்கிறது இந்த விண்கல வடிவமைப்பு. ஏன் ?
Carl S Engelbrecht - கொடைக்கானல் சர்வதேச பள்ளி
இந்த விண்கலத்தின் ப்ரொபல்சனை வடிவமைத்த கார்ல் எஸ். எங்கெல்ப்ரெச்ட் (Carl S Engelbrecht) திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிறந்தவர். அவருடைய பள்ளிப்பருவம் முழுக்க முழுக்க தமிழகத்தில் தான் அமைந்தது.
இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த போதும் கூட தமிழில் முகமன் கூறி வரவேற்று பேசியிருக்கிறார் கார்ல்.
அப்போது அவர் கூறியது “நான் என்னுடைய வாழ்நாளில் 15 வருடங்கள் தமிழகத்தில் கழித்திருக்கின்றேன். தமிழ் பேசுவதோடு எழுதவும் படிக்கவும் தெரியும். நான் கொடைக்கானல் இண்டெர்நேசனல் பள்ளியில் படித்தவன்” என்று கூறியிருக்கிறார். பின்னர் 1977ம் ஆண்டு அமெரிக்கா சென்றுவிட்டார் கார்ல்.
பேசும் போதும் நான் தமிழன் என்ற ஒரு உள்ளுணர்வோடு அவர் பேசியிருக்கிறார். அவருக்கும் தமிழகத்திற்குமான உறவு அத்தோடு நின்றுவிடாமல், அவருடைய மகளான கில்லியன் எங்கெல்ப்ரெச்ட், வேலூரில் இருக்கும் ஹோலி கிராஸ் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய மனைவி மரியாவும் கொடைக்கானலில் தான் பிறந்தவர். அவருடைய தாய் - தந்தையர் இருவரும் கொடைக்கானல் இண்டெர்நேசனல் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள். மரியா 12ம் வகுப்பு வரை அதே பள்ளியில் படித்தவர். அதே பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்கள் மேரிலாண்டில் வசித்து வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.