தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகையை முன்னிட்டு வரும் மார்ச் 25 மற்றும் மார்ச் 30 ஆகிய இரு தினங்களும் தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விட்ட பின்னர், இந்த கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதும் கூட வார நாட்களில் சுமார் 65 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தருகிறார்கள். வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை ஏறத்தாழ 80 ஆயிரத்தை தாண்டுகிறது.
இந்த சூழலில் வரும் மார்ச் மாதம் 25-ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன முறையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பாக, மார்ச் 30-ஆம் தேதி தெலுங்கு வருட பிறப்பான ஸ்ரீ விஷ்வவசு நாம யுகாதி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.
இந்த யுகாதி பண்டிகையை முன்னிட்டு மார்ச் 25-ஆம் தேதி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதற்காக கோயிலை சுத்தப்படுத்துவது வழக்கமான நடைமுறையாகும். அதன்பேரில், நாளை காலை 6 மணி முதல் 10 மணி வரை நான்கு மணி நேரத்திற்கு மட்டும் அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாளை குறிப்பிடப்பட்ட நடைமுறையை தவிர மற்ற அனைத்து வி.ஐ.பி பிரேக் தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது. இதன் பொருட்டு இன்று (மார்ச் 24) முதல் எந்த விதமான வி.பி.ஐ தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக் கொள்ளப்படாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது தவிர, நாளை நடைபெற இருந்த அஷ்டதலபாத பத்மாராதனை சேவையும் ரத்து செய்யப்படுகிறது.
யுகாதி பண்டிகையான மார்ச் 30-ஆம் தேதியன்று, சகஸ்ர தீப அலங்கார சேவையை தவிர்த்து மற்ற அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படவுள்ளது. அன்றைய தினமும் வி.ஐ.பி ப்ரொடோக்கால் அடிப்படையில் மட்டும் அனுமதி அளிக்கப்படும். இவற்றை கருத்திற் கொண்டு பக்தர்கள் தங்கள் தரிசனத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு தேவஸ்தான நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.