இடியாப்பம் உள்ளிட்ட உணவுகளுக்கு ஏற்ற சுவை முருங்கைக்காய் தேங்காய் கிரேவி எப்படி செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
முருங்கைக்காய் அனைவருக்கும் பிடித்த சத்தான உணவுப் பொருள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். முருங்கைகாய் சாம்பார், கூட்டு என செய்து ருசித்திருப்போம். ஆனால், கேரள தாக்கத்தில் செய்யப்படும் டேஸ்டியான முருங்கைகாய் தேங்காய் கிரேவி இன்னும் கொஞ்சம் சாப்பிடத் தூண்டும்.
செஃப் வெங்கடேஷ் பட் பகிர்ந்துள்ள முருங்கைகாய் தேங்காய் கிரேவி எப்படி செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முருங்கைகாய் - 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
தேங்காய் துருவல் – ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் – 2 கைப்பிடி
சீரகம் – 1 டீஸ்பூன்
கடலை எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
கடுகு – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு பேனை வைத்து 200 மிலி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் நீரில் மஞ்சள் தூள் சேர்த்து, நறுக்கிய முருங்கைகாய், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
இதற்கிடையில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், வெங்காயம், சீரகம், கறிவேப்பிலை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது வெந்துக் கொண்டிருக்கும் முருங்கைகாயில் அரைத்த தேங்காய் துருவலை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் இறக்கி வைத்து விட்டு, அடுப்பில் மற்றொரு பேனை வைத்து சூடாக்க வேண்டும். அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
நன்றாக வதங்கிய உடன் அடுப்பை அணைத்து விட்டு, இதில் மிளகாய் தூள் சேர்த்து கலக்க வேண்டும். நன்றாக கலந்த பின்னர் வேக வைத்த முருங்கைகாயில் கொட்டி கிளறி விட வேண்டும்.
அவ்வளவு சுவையான முருங்கைகாய் தேங்காய் கிரேவி ரெடி. 4-5 இடியாப்பத்தை எடுத்து, கிரேவியை ஊற்றி சாப்பிட்டு மகிழுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“