தியாகிகளைப் போற்றுவோம்: ‘ஜெய் ஹிந்த்’ தந்த செண்பகராமன்

இன்றைய இளையச் சமுதாயம் சுதந்திரத்தின் வலியை உணர வேண்டும்.

By: August 14, 2019, 6:05:00 PM

டாக்டர் கமல. செல்வராஜ்

நீர்வளம், நிலவளம், தொழில் வளம் என எத்தனை வளங்களுண்டோ, அத்தனை வளங்களும் கொட்டிக் கிடந்தது இந்தியப் பெரும் நாட்டில். இதனை,

‘என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’

என்னும் மருதகாசியின் பாடல் வரிகள் மூலம் நம்மால் நன்குணர்வதற்கு இயலும்.

விவசாயமும், விளைப் பொருட்களும் தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு சான்றாதாரங்களாகத் திகழ்ந்தன என்பதற்கு

‘மாடுகள் கட்டிப் போர் அடித்தால்

மாளாது செந்நெல் என்று யானைகள்

கட்டிப் போரடித்தத் தமிழகம்’

என்னும் பாடல் வரிகள் மேலும் இதற்குச் சான்று பகிர்ந்து நிற்கின்றன.

பெண்களுக்குப் பேரழகும், நாட்டிற்கு பெரும் செல்வமும் பெரும் தீங்கை விளைவிக்கும் என்பதற்கிணங்க, அத்தனை வளங்களையும், செல்வச் செழிப்பையும் கண்ட அயல் நாட்டினர் இந்தியாவின் மீது பெரும் மோகம் கொண்டனர்.

அவர்களின் தந்திரமும் புத்தி சாதுர்யமும் நம் நாட்டு சிற்றரசர்களின் சிந்தையைச் சிதைத்து, நாட்டையே சின்னாபின்னமாக்கி அடிமைப் படுத்துவதற்கு வழிகோலின. அதன் விளைவு சுமார் இருநூறுக்கும் மேலான ஆண்டுகள், அன்னியர்களின் ஆட்சியில் அடிமைகளாய் நம்மவர்கள் மண்டியிட்டனர்.

மண்டியிட்டவர்கள் மாண்டுபோன பின்னர் உயிர் பெற்ற வீரமும் தீரமும் கொண்ட இளம் பாரதப் பிரம்மாக்களிடையே கொளுந்து விட்டெரிந்தது சுதந்திர நெருப்பு.

அதன் வெளிப்பாடு, சுதந்திரப் போராட்டங்களாக வெடித்தன. ஆற்றல் மிக்கப் போராளிகளின் எழுச்சி மிக்க தீப்பொறிப் பேச்சுகளும், வாள் முனைகளே தோற்றுப்போகும் பேனாமுனை எழுத்துகளும், சத்தமின்றி சாதிக்கும் சத்தியாக்கிரங்களும் அன்னிய ஆட்சியாளர்களைக் கதிகலங்க வைத்தன. கூடவே நம் நாட்டை விட்டே வெளியேற்றவும் செய்தன.

அப்படிப்பட்டப் தியாகச் செம்மல்களை, அவர்கள் தம் வாழ்க்கையை நினைவேற்றுவது, இந்தச் சுதந்திரத்தின விழாவின் பெரும் பேறாகும்.

நமது இளைய சமுதாயம் சுதந்திரத்திரப் போராட்டத்தின் எவ்விதத் தாக்கத்தையும் அறியாமல், அதன் முக்கியத்துவத்தை உணராமல், தற்போது அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுபிட்சமான வாழ்கையைப் பெரிதாகக் கருதுகின்றனர்.

அதனால் ஆண்டுக்கு ஆண்டு, நாளுக்கு நாள் இன்றைய இளம் தலைமுறையினரிடையே தேசப்பற்றின்மையும் தேசத்தலைவர்களை மதிக்கும் பண்பாடின்மையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

அதனால்தான் கல்வி நிறுவனங்களிலிருந்து, திரையரங்குகள் வரை தேசியக் கீதத்தை இசைப்பதற்கும், தேசியக் கொடியை மதிப்பதற்கும் நீதிமன்றங்கள் உத்தரவுப் பிறப்பிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உந்தப்பட்டிருக்கிறோம்.

இன்றைய இளையச் சமுதாயம் சுதந்திரத்தின் வலியை உணர வேண்டும் என்பதற்காக இதோ ஒரு படைப்பாளி இப்படியொரு உணர்ச்சிப் பூர்வமானப் பாடலைப் படைத்துள்ளார்.

‘சும்மாவா வந்தது?

சுதந்திரம் என்பது

சும்மாவா வந்தது?

எத்தனை எத்தனை தடியடியைத் தாங்கினர்

எத்தனை எத்தனை செக்கிழுத்து வாடினர்

தூக்குமேடை ஏறிநின்ற காளையர்கள் எத்தனை

தாக்குகின்ற குண்டினாலே உயிரிழந்தோர் எத்தனை

ஆசிகூறி வாழ்த்திடவே அஞ்சுவார் பெரியோர்

மாசுபேசி மயக்கிடவே முனைந்து நிற்கும் சுற்றம்

இருந்தபோதும் லட்சியத்தில் வீறுநடைபோட்டு

இன்னுயிரைத் தந்தவர்கள் எத்தனையோ எத்தனை

போரிலே இறங்கிவிட்டால் இன்னல்சூழும் தெரியும்

பெற்றதாய் பசித்திருப்பாள் பிள்ளைக்கது புரியும்

அன்னையார்க்கு அன்னையான பாரதியின் துயர்துடைக்க

தன்னைத்தானே அழித்துக் கொண்டோர் எத்தனையோ எத்தனை’

இப்பாடலின் பொருளை ஒவ்வொரு இளைஞனும் தனது இதயத்தில் இதமாகப் பதியம் செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதிலிருந்தும் எண்ணற்ற இளைஞர்களும் தலைவர்களும் சுதந்திரப் போராட்டத்தில் களம் இறங்கினார்கள். அவர்களில் குமரி மாவட்டத்தைச் சார்ந்தவர்களின் பங்களிப்பும் பார் போற்றும் வண்ணம் இருந்தது. அவர்களில் வீரன் செண்பகராமனின் பங்களிப்பானது படிப்போரைப் பரவசமடையச் செய்வதாகும்.

திருவாங்கூர் சமஸ்தானத்திற்குட்பட்ட எட்டு வீட்டுப் பிள்ளைமார் எனப்படும் பெயரும் புகழும் மிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயதிலையே பேரறிவும், பெரும் ஆற்றலும் இயல்பாகவே இவரிடம் குடிகொண்டிருந்தது.

அதனால் வீரத்தோடும் தீரத்தோடும் வளர்ந்தார். தனது பதினேழாவது வயதில் இந்தியாவிலிருந்து ஜெர்மனிக்குச் செல்லும் வாய்ப்பு தானாகவே அவருக்குக் கிடைத்தது. அங்கிருந்து கொண்டே இந்தியாவில் நடக்கும், அன்னிய நாட்டினரின் கொடூரச் செயல்களை மிக உன்னிப்பாகக் கவனித்து வந்தார்.

அவர் அந்நிய நாட்டில் வாழ்ந்தாலும் தன் தாய் நாட்டு மக்கள் அன்னியரால் அடிமைப்படுத்தப் படுவதை, அவரால் சிறிதளவும் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. அதனால் அவரிடம் எழுந்த சுதந்திர வேட்கையானது அன்னிய நாட்டினரை நடுநடுங்க வைத்தது.

அனைவரையும் வசீகரிக்கும் பேச்சாற்றலும் படிப்போரின் உணர்ச்சிகளைத் தூண்டும் எழுத்தாற்றலும் கொண்டிருந்த அவர் சுயமாகவே பத்திரிகை நடத்தி, அதில் எழுச்சியூட்டும் படைப்புகளை வெளியிட்டு அனைவரையும் சுதந்திரப் போராட்டத்திற்கு நேராகத் திசைதிருப்பினார்.

இவர் ஜெர்மனியில் இருந்ததால், இவருக்கும் அப்போது அந்நாட்டு அதிபராக இருந்த வில்லியம் கெய்சர் என்பவருக்கும் இடையே நெருக்கமானத் தொடர்பு ஏற்பட்டது. அதன் மூலம் ஜெர்மனியின் துணையோடுதான் ஆங்கிலேயர்கள், இந்தியாவில் ஆட்சியும் அராஜகமும் நடத்துகிறார்கள் என்பது அவருக்கு வெட்ட வெளிச்சமானது.

எனவே ஜெர்மனியில் இருந்து கொண்டே இந்திய விடுதலைக்காகப் போராட்டம் நடத்துவதற்காகத் தீவிரமாகத் திட்டமிட்டார். அதன் பொருட்டு ஜெர்மனியில் வசித்து வந்த இந்தியர்களை ஒன்று திரட்டி INDIAN NATIONAL VOLUNTEERS என்ற அமைப்பை இவராகவே உருவாக்கினார்.

அதோடு மட்டும் நின்று விடாமல் “ஜய் ஹிந்த்” (தாய் நாட்டை வணங்குவோம்) என்ற வீர, தீரக் கோஷத்தை உருவாக்கி அனைவராலும் வீர ஆவேஷத்தோடு முழக்கமிடச் செய்தார். இவரது “ஜய் ஹிந்த்” கோஷமும் பத்திரிகையில் பிரசுரித்தப் படைப்புகளும் இந்தியாவில் வசித்து வந்த சுபாஷ்சந்திர போஸ் போன்ற, ஆயிரக்கணக்கான வீறு கொண்ட இளைஞர்களைச் சுதந்திரப் போராட்டத்திற்குள் மிக வேகமாகக் களம் இறங்குவதற்கு வழிகோலின.

ஜெர்மனியில் கெய்சர் அதிபராக இருந்தது வரை செண்பகராமன் பிள்ளை எவ்வித தொல்லையும் இல்லாமல் இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக பல்வேறு வழிகளில் உதவி வந்தார்.

ஆனால் அங்கு கெய்சர் அதிபர் பதவியிலிருந்து விலகி அடால்ஃப் ஹிட்லர் அதிபராக ஆன பின்பு இவருக்குப் பல்வேறு தொல்லைகள் இழைக்கப்பட்டன. ஹிட்லர் ஒரு சா்வாதிகாரியாகச் செயல்பட்டார். எப்போதும் இந்தியாவையும் இந்தியர்களையும் தரக்குறைவாகப் பேசுவதையே தாரக மந்திரமாகக் கொண்டிருந்தார்.

ஒரு சமயம் செண்பகராமன் ஹிட்லருடன் உரையாடிக் கொண்டிருந்த போது “இந்தியர்கள் பிரிட்டீசாருக்கு அடிமையாக இருக்கவே தகுதி பெற்றுள்ளார்கள். இந்தியாவுக்கு விடுதலைக் கிடைத்தால், நாட்டைத் திறமையாக ஆளும் தகுதி இந்தியருக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே ” என்று இந்தியரைத் தாழ்த்திக் கூறினார் ஹிட்லர்.

அதிபர் ஹிட்லரின் இந்த இழிச்சொல் செண்பகராமன் பிள்ளையை மிகவும் கோபாவேஷத்திற்கு உள்ளாக்கியது. அதனால் ஹிட்லருக்கு நேராகவே எதிர்த்துத் திறமையாக வாதாடி எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்புப் கோர வைத்தார்.

இதனை தனது மனதிற்குள் வஞ்சனையாக வைத்திருந்த ஹிட்லர், அவர் கலந்து கொண்ட அரசாங்க விருந்து ஒன்றில் பரிமாறப்பட்ட உணவில் திட்டமிட்டபடி, அவரது ஆதரவாளர்களை வைத்து நஞ்சைக் கலக்கச் செய்தார். அந்த நஞ்சு நாளடைவில் மெல்ல மெல்ல செண்பகராமனை நோயாளியாக்கி படுத்தப் படுக்கையில் வீழ்த்தியது.

அந்த நஞ்சிலும் அவர் இறக்காததை அறிந்த கருணையற்ற ஹிட்லர், செண்பகராமன், தீவிர சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனையில் ஊசி மூலம் விஷத்தை செலுத்தி சிறுது சிறிதாக அவரை மரணமடையச் செய்தார்.

தனது தாய் நாட்டு சுதந்திரத்திற்காக அயல் நாட்டிலிருந்து இவ்வளவு கொடுமைகளையும் அனுபவித்த அந்த மாவீரன் தனது மாசற்ற மனதிற்குள் தீராத ஆசை ஒன்று வைத்திருந்தான்.

அந்நிய நாட்டில் வைத்து தனது உயிர் பிரிந்து, உடல் எரியூட்டப் பட்டாலும், என்றைக்கு இந்தியா சுதந்திரம் அடைகிறதோ அதன் பிறகு அந்தச் சாம்பலை தான் வளர்ந்த மண்ணான திருவனந்தப்புரத்திலுள்ள கரமனை ஆற்றில் கரைத்து விட்டு, மீதியை வயல் வெளியில் தூவ வேண்டும் என தனது மனைவியிடம் வேண்டுகோள் வைத்திருந்தார்.

தனது கணவனின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவரது மனைவி மணிப்பூரைச் சார்ந்த ஜான்சி, முப்பத்தியிரண்டு ஆண்டுகள் அவரின் சாம்பலைக் பாதுகாத்து வைத்திருந்திருக்கிறார். அதன் பிறகு அவரின் விருப்பப்படியே அவரின் சாம்பலைக் கரமனை ஆற்றிலும் வயல் வெளிகளிலும் தூவியுள்ளார்.

தியாகத்திற்கும் தேசப் பற்றிற்கும் இதைவிட தலைசிறந்த ஒரு மாமனிதரை சான்றாக்குவதற்கு இயலுமா என்பது கேள்விக்குறியே.

எனவே இவரைப் போன்றத் தீயாகத் தீபங்களை என்றும் மனதில் நிலைநிறுத்தி அவர்களுக்கு சுதந்திர தினத்தில் உரிய மரியாதைச் செலுத்துவது இன்றைய இளைய சமுதாயத்தின் தலையாயக் கடமையாகும்.

. ஜெய் ஹிந்த்

வந்தே மாதரம்.

(கட்டுரையாளர், முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம், அருமனையை சேர்ந்தவர். பேச: 9443559841, அணுக: drkamalaru@gmail.com )

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Chempakaraman pillai jai hind history in tamil independence day essay

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X