Chennai artist attempts world record with Gandhi coffee art : 74வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 74வது சுதந்திர தினத்தில் இந்நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக 74 காந்தியின் உருவப்படம் காஃபி பொடியால் வரையப்பட்டு கின்னஸ் சாதனை படைக்க முயன்றிருக்கிறார் ஹிந்துஸ்தான் சர்வதேச பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றும் சிவராமன் ராஜலிங்கம். சென்னை ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரியில் 2009ம் ஆண்டு கலைத்துறையில் பட்டம் பெற்ற சிவராமன் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கிண்டியில் இருக்கும் இப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
A large coffee painting of Mahatma Gandhi has been unveiled in India in an attempt to break a Guinness World Record pic.twitter.com/WKnfJyafVT
— Reuters (@Reuters) August 14, 2020
திருநங்கைகள், உடல் ஊனமுற்றோர்கள், மற்றும் பார்வை குறைபாடு உடையவர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துபவர் சிவராமன். லிம்கா உலக சாதனைக்கான புத்தகத்தில், பைபிள் வாசகங்கள் அடங்கிய, La Pieta , யேசு நாதரின் உருவப்படத்தை வரைந்தார். அந்த ஓவியத்தில் ஒருவர் முழுமையாக பைபிளை படிக்க முடியும். இந்த ஓவியம் வரைய 72 நாட்கள் (864 மணி நேரம்) எடுத்துக் கொண்டார் கன்னியாகுமரியை பூர்வீகமாக கொண்ட சிவராமன்.
34 வயதாகும் சிவராமன் தற்போது தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் அம்பத்தூரில் வசித்து வருகிறார். கொரோனா ஊரடங்கிற்கு முன்பாகவே, இந்த ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பான வகையில், தன் ஓவியத்தின் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு தர வேண்டும் என்று முடிவு செய்திருந்தார் சிவராமன். ஆனால் கொரோனா ஊரடங்கின் போது அவருடைய எண்ணத்திற்கு ஒப்புதல் வழங்கியது கின்னஸ் நிர்வாகம். கொரோனா ஊரடங்கில் இது எப்படி சாத்தியமாகும் என்று யோசித்த அவர், இதனை கைவிடவும் முடிவு செய்தார்.
ஆனால் பள்ளி நிர்வாகம் அவருக்கு உறுதுணையாக இருந்து இந்த முயற்சியை வெற்றியடைய வைத்துள்ளது. கொரோனா ஊரடங்கின் போது, விற்பனையாகாமல் தேங்கிய 22 கிலோ காஃபி பொடியை கோடம்பாக்கத்தில் அமைந்திருக்கும் தங்கம் காஃபி ட்ரேடர்ஸில் வாங்கி இந்த ஓவியத்தை வரைந்துள்ளனர். இதற்கு முழுமையாக ஸ்பான்ஸர் செய்துள்ளது ஹிந்துஸ்தான் சர்வதேச பள்ளி.
மேலும் படிக்க : அமெரிக்காவில் ஒலிக்க இருக்கும் இருளர் பழங்குடி குழந்தைகளின் குரல்கள்!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் சிவராமன் பேசிய போது “பொதுவாகவே காஃபி ஆர்ட் என்றால் காஃபி ப்ரௌவ்ன் நிறத்தை மட்டுமே பயன்படுத்துவார்கள். ஆனால் இம்முறை மூன்று நிறங்களை பயன்படுத்தியுள்ளோம். டார்க் காஃபி ப்ரௌவ்ன் , ப்ரௌவ்ன், மற்றும் லைட் ப்ரௌன் நிறங்களில் ஓவியம் வரைந்திருக்கின்றோம். ஒவ்வொரு நிறத்திற்கும் ஏற்ற வகையில் நீரின் கொதிநிலையை மாற்றி மாற்றி நிறக்கலவை உருவாக்கப்பட்டது. என்னால் இதை இன்னும் நம்பவே இயலவில்லை. என்னுடைய பள்ளி நிர்வாகம் எனக்கு மிகப்பெரிய உதவியை செய்துள்ளது. அவர்களின் உதவி இல்லையென்றால் நிச்சயம் இது சாத்தியமில்லை” என்று கூறினார்.
”ஒரு ஓவியத்தை வரைய 24 மணி நேரம் வரை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் 2020 சதுர அடியில் 74 காந்தி உருவங்களை வரைவது தான் இதன் நோக்கம். 24 மணி நேரத்தை இலக்காக வைத்திருந்தோம். ஆனால் அதற்கு முன்பாகவே இந்த ஓவியத்தை வரைந்துவிட்டோம்” என்கிறார் சிவராமன்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இதற்கு முன்பு காஃபி ஓவியத்தில் இரண்டு மாபெரும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கிரீஸின் வரைபடம் 1704 சதுர அடியில் வரையப்பட்டது. மற்றொன்று 33 மணி நேரத்தில் ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் ஓவியம் ஒன்றை வரைந்திருக்கிறார். இவர்களின் இரண்டு சாதனைகளையும் ஒரே நேரத்தில் முறியடிக்க விரும்பிய சிவராமன் 2020 சதுர அடியில், 22 :30 மணி நேரத்தில் இந்த அழகிய ஓவியத்தை வரைந்து முடித்துள்ளார். சரியாக 14ம் தேதி காலை 06:15 மணிக்கு ஓவியம் வரைய துவங்கி, 15ம் தேதி காலை 04:45 மணிக்கு நிறைவு செய்தார். 2020 சதுர அடிகள் ஏன் என்று கேட்ட போது, இந்த ஆண்டை நினைவில் கொள்வதற்காக இந்த அளவு எடுத்துக் கொள்ளப்பட்டது என்கிறார் அவர்.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் கூறும் போது, இந்த சாதனை வெறும் ஒரே நாளில் உருவாகிவிடவில்லை. சிவராமனுக்கு தேவையான காஃபியை வாங்குவதில் துவங்கி இந்த நிகழ்வை பதிவு செய்ய கேமரா வாங்குவது வரை என கிட்டத்தட்ட 3 மாத உழைப்பிற்கு பிறகே நாங்கள் இந்த இலக்கை அடைந்திருக்கின்றோம். தேசியபற்றையும் நாற்றுப்பற்றையும் சேர்த்தே எங்களின் குழந்தைகளுக்கு கற்றுத் தருகின்றோம். அதே நேரத்தில் திறமையானவர்கள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகிறார்கள். நிச்சயம் சிவராமனின் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இந்துஸ்தான் சர்வதேச பள்ளியின் ஊடகத்துறை தொடர்பாளர் முகமது ஜபியுல்லா ஹமீத்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.