சென்னை : பத்து நாளில் சொந்த ஊர் இந்த இடம் தான்!!!

ஜனார்தன் கௌஷிக்

Chennai Day : “பல ஊரு சனம் வந்து வாழும் இடம் தான், பத்து நாளில் சொந்த ஊரு இந்த இடம் தான்” , இது பாடல் வரிகள் மட்டுமல்ல, சென்னையின் உண்மை முகமும் கூட.  நம்ம சென்னைக்கு இன்றுடன் 379 வயசு ஆகிடிச்சி. இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் புகழ் பெற்ற நகரங்களில் சென்னை முக்கியமான ஒன்று.

Chennai Day : சென்னை பற்றிய சின்ன வரலாறு:

1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 -ம் தேதி சென்னப்பநாயக்கரின் மகன்களிடம் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள ஒரு இடத்தை கிழக்கு இந்தியா நிறுவனத்தை சார்ந்த பிரான்சிஸ் டே என்பவர் விலைக்கு வாங்கினார்.

Chennai Day

சென்னப்ப நாயக்கர் நினைவாக அந்த இடத்திற்கு சென்னப்பட்டினம் என்று பெயரிட்டனர். சென்னப்பட்டினத்தின் வாழ்வாதரமாக மீன்பிடி தொழில் விளங்கியது.

Chennai Day

இந்தியாவின் நான்காவது பெரிய நகரமான சென்னை இப்போது இருக்கின்ற நவீன இந்தியாவின் முதல் நவீன நகரம் ஆகும். சுனாமி, வர்தா, வெள்ளம் என எத்தனை இயற்கை சீற்றங்கள் வந்தாலும் அஞ்சாது இன்றும் நிமிர்ந்து நிற்கிறது சென்னை மாநகரம்.

Chennai Day

மத்திய வீட்டமைப்பு மற்றும் நகர விவகார அமைச்சகம், Ease  of living Index என்ற கணக்கீட்டு ஒன்றை இந்தாண்டு வெளியிட்டது. அந்தக்  கணக்கீட்டின் படி, இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோ நகரங்களிலும், சுகாதாரத்தின் அடிப்படையில் சென்னை தான் பெஸ்ட் என்ற தகவல் வெளியாகியது. அதே போல், பெண்களுக்கு எதிராக குற்றங்கள் பெருகி வரும் இந்த நேரத்தில், இந்தியாவில் பாதுகாப்பான மெட்ரோ நகரங்களில்  சென்னைக்கு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

Chennai Day

பன்முகத் தன்மை வாய்ந்த நகரம் இது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய கட்டிடங்களான ஜார்ஜ் கோட்டை, சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை உயர் நீதிமன்றம் போன்றவற்றையும் இங்கே காணலாம். அதன் அருகே நம் ஆட்சியாளர்கள் கட்டிய LIC கட்டிடம், செம்மொழி பூங்கா, அண்ணா நூலகம், வண்டலூர் உயிரியல் பூங்கா போன்றவற்றையும் இங்கே காணலாம். குடிநீருக்காக அல்லல்படும் காட்சிகளும் இங்கே காணலாம், உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனாவையும் காணலாம்.

Chennai Day

தென்னிந்தியாவின் நுழைவாயிலாக விளங்கும் சென்னை, யூனிட்டி இன் டைவர்சிட்டி என்ற சொல்லுக்கு நிதர்சன சாட்சியாக திகழும் நகரம். மொழி, இனம், மதம் என எந்த வேறுபாடுமின்றி, அனைவரும் எவ்வித சலனமுமின்றி வாழும் நகரம் இது. மற்ற பெருநகரங்களை போல் பூர்விக மக்களின் எண்ணிக்கை சென்னையில் அதிகம் இல்லை. மற்ற ஊர்களில் இருந்து பிழைப்பிற்காக இந்த ஊருக்கு வந்து, இதையே தங்கள் ஊராக மாற்றிக் கொண்டவர்களே அதிகம்.

Chennai Day

 

அன்பை பொழிவதில் சென்னை மக்களுக்கு ஈடு இணை இல்லை. எந்த மாநிலத்தில் பேரிடர் ஏற்பட்டாலும், உதவிக்கரம் நீட்டுவதில் சளைத்தவர்கள் இல்லை சென்னை வாசிகள். வேற்று மொழி மக்களை இங்கு இருக்கும் ஆட்டோ அண்ணாக்கள் எந்த திக்கிற்கும் செல்ல உதவி புரிவார்கள். மழைக்கு கூட பள்ளி வாசல் மிதிக்காத அவர்கள், ஆங்கிலயேர்கள் இங்கே வந்தால் அவர்கள் மொழியில் உரையாடுவார்கள், அது தான் இந்த ஊர் சிறப்பு.

Chennai Day

சென்னை வெயில், வாகன நெரிசல், மூக்கை மூடி கொண்டு செல்லும்படி உத்தரவிடும் கூவம் என்று இந்த ஊரை பற்றி குறைகள் கூறினாலும், சென்னை என்ற இந்த மாநகரம் நம்பி வந்தவர்களை ஒருபோதும் கைவிட்டது கிடையாது.

Chennai Day

இத்தனை சிறப்பம்சங்கள் நிறைந்த இந்த மாநகரம்,  379 வருடம் ஆனாலும் என்றும் பதினாறு போல் துடிப்புடன் காணப்படுகிறது.

மெட்ராஸ் தினம் : 379வது சென்னை பிறந்தநாள்… சென்னை வாசிகளின் வாழ்த்து!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

×Close
×Close