கட்டுரையாளர்: மருத்துவர் வீ.புகழேந்தி
உலக சுகாதார நிறுவன விதிகளின் படி தனிநபர் பசுமைப்பரப்பு 9.5 சதுர மீட்டர் இருக்க வேண்டும். ஆனால், சென்னையில், அது 8.75 சதுர மீட்டராக குறைவாக உள்ளது. இதனால் சென்னையில் பசுமைப்பரப்பைக் கூட்டவும், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பைக் குறைக்கவும் நடவடிக்கைகள் தேவை.
ஆனால் சென்னையில் கள உண்மை வேறுவிதமாக உள்ளது. தாம்பரத்தில் உள்ள ஏரிகளில் 3 வித பாதிப்புகள் இருக்கிறது. இவை ஏரிகளை சிறுகச்சிறுக அழித்து வருகிறது.
1). ஆக்கிரமிப்பு- அரசியல் ஆதரவுடன் வீட்டுமனைப் பெருக்கம் அதிகரித்து வருகிறது.
ஏரியின் பெயர் |
முந்தைய அளவு |
தற்போதைய அளவு |
சிட்லபாக்கம் ஏரி |
86 ஏக்கர் |
46 ஏக்கர் |
பல்லாவரம் ஏரி |
125 ஏக்கர் |
50 ஏக்கர் |
செம்பாக்கம் ஏரி |
150 ஏக்கர் |
90 ஏக்கர் |
திருநீர்மலை ஏரி |
150 ஏக்கர் |
80 ஏக்கர் |
ஆக்கிரமிப்பின் காரணமாக அட்டவணையில் உள்ள அளவிற்கு ஏரிகள் சுருங்கியுள்ளன.
2). தூய்மைப்படுத்தாமல் சாக்கடைக் கழிவுகள் நேரிடையாக ஏரிகளில் கலப்பதை அரசு ஆதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. மேற்சொன்ன அனைத்து ஏரிகளிலும் இது நடக்கிறது.
3). இவ்வாறு கழிவுநீர் கலப்பதால் ஊடுருவும் தாவரமான ஆகாயத்தாமரை நீரில் நன்கு வளர்ந்து மோசமான பாதிப்பை உண்டாக்கி வருகிறது. இதையும் நீக்க அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
தாம்பரம் மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் நடைமுறையில் இல்லை. மழைநீர் வழிந்தோடும் பாதைகளில் சாக்கடை நீர் தேங்கி, மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பாதாள சாக்கடை திட்டங்களை அமல்படுத்தாமல், (ஏரிகளுக்கு அருகிலாவது) சாக்கடை நீர் எரியில் கலப்பதால் ஏரிகளை மீட்டெடுக்கும் திட்டங்கள் தோல்வியில் முடிகின்றன.
பாதிப்புகள்
ஏரிகளுக்கு மறுவாழ்வு கொடுக்க ஏரிகளை ஆழப்படுத்தும் (தூர்வாருதல்) பணியில், அரசு, தனியார் உதவியுடன் திட்டங்களை செயல்படுத்தினாலும், கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதால், நீரின் தரம் குறைந்து, குடிப்பதற்கு உகந்த சூழல் இல்லாமல் போகிறது. குடிநீர் பற்றாக்குறை இதனால் ஏற்படுகிறது.
மழைக்காலத்தில் ஏரியின் பரப்பு மேற்சொன்ன காரணங்களால் குறைந்து வருவதால், அதன் கொள்ளளவு குறைந்து, வெள்ள பாதிப்பும் ஏற்படுகிறது. ஏரிகளின் நீர் மாசடைவதால் ஏரிகளை சார்ந்து இருக்கும் பல்லுயிர் பெருக்கம் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகிறது.
ஏரிகளை மேம்படுத்த போதிய நிதியை அரசு ஒதுக்காமல் இருப்பதாலும், பணிகள் முழுதும் நடக்காமல் இருப்பதாலும் வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளை அரசால் முழுமையாக மேற்கொள்ள முடியாமல் போகிறது.
ஏரிகள் மேம்படுத்தும் பணியை அரசு தனியாரிடம் கொடுக்காமல் தானே முன்வந்து செய்வது சிறப்பாக இருக்கும். கழிவுநீர் ஏரிகளில் கலப்பதை தடுக்காமல், ஏரிகளை மேம்படுத்தும் பிற பணிகள் எதுவும் பெருமளவு பலனைத் தராது என்பதை அரசு உணர்ந்து, மேற்சொன்ன 3 விசயங்களை கருத்தில் கொண்டு, தமிழக அரசு உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து நீர்நிலைகளைக் காக்க முன்வருமா?
(மருத்துவர் புகழேந்தி சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் அணு உலைகளுக்கு எதிரான செயல்பாட்டாளர்)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.