பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா தென் மண்டல கலாச்சார மையத்துடன் இணைந்து, அதன் பாரம்பரிய மார்கழி இசை மற்றும் நடன விழாவை நவம்பர் 24 அன்று தொடங்குகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை தொடங்கி வைக்கிறார். பவன் சென்னை கேந்திரா துணைத் தலைவர் நல்லி குப்புசாமி செட்டி விழாவுக்கு தலைமை வகிக்கிறார்.
இந்த வருடத்தின் சிறப்பம்சமாக இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்கள் இங்கு இசை நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள்.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர் அபய் சோபோரி சந்தூர் இசையையும், திரிபுராவைச் சேர்ந்த சக்தி சக்ரவர்த்தி ஹிந்துஸ்தானி குரல் நிகழ்ச்சியையும், கொல்கத்தாவைச் சேர்ந்த திபஜன் குஹா- சிதார் நிகழ்ச்சியையும் வழங்க உள்ளனர்.
இந்த விழாவில் சுதா ரகுநாதன், விஜய் சிவா, அபிஷேக் ரகுராம், லால்குடி ஜிஜேஆர் கிருஷ்ணன் மற்றும் விஜயலட்சுமி, ஏ கன்னியாகுமரி மற்றும் எம்பார் கண்ணன், ராஜேஷ் வைத்யா மற்றும் யு ராஜேஷ் போன்ற பிரபல கர்நாடக இசைக்கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர்.
விழா மூன்று பிரிவுகளாக திட்டமிடப்பட்டுள்ளது- நவம்பர் 24 ஆம் தேதி தொடங்கும் இசை விழா (குரல் மற்றும் கருவி), டிசம்பர் 13 வரை நடைபெறும். இதில் 54 தனி நிகழ்ச்சிகள் உண்டு.
இரண்டாவது பிரிவில் டிசம்பர் 14 முதல் டிசம்பர் 31 வரை, கர்நாடக இசைக் கச்சேரியில் 64 தனி நிகழ்ச்சிகள் இடம்பெறும். மூன்றாவது பகுதி ஜனவரி 2, 2024 முதல் ஜனவரி 15, 2024 வரை நடன விழாவாகும், இதில் 42 குழு மற்றும் தனி நிகழ்ச்சிகள் உள்ளன.
ஜனவரி 1 முதல் 15, 2024 வரை, பவனில் கல்யாணபுரம் ஆராவமுதாச்சாரியாரின் திருப்பாவை உபன்யாசம் நடைபெறும். அனைத்து கச்சேரிகளும் இலவசம். அனைவரும் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“