Advertisment

'தமிழ் மீது தீராக் காதல்': மெரினாவில் விமான சாகசத்தை வர்ணனை செய்த ரேவதி யார்? செல்ஃபி எடுத்து மக்கள் மகிழ்ச்சி

சென்னை விமானப்படை சாகச நிகழ்ச்சியை தமிழில் வர்ணனை செய்து அசத்திய கார்த்திக் – ரேவதி தம்பதி; செல்ஃபி எடுத்து மகிழ்ந்த மக்கள்; நிகழ்ச்சிக்குப் பின் கார்த்திக் – ரேவதி கூறியது என்ன?

author-image
WebDesk
New Update
karthik revathi

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியை பைலட் கார்த்திக் - ரேவதி தம்பதியர் தமிழில் வர்ணனை செய்து மக்களைக் கவர்ந்தனர். தொடர்ந்து பொதுமக்கள் கார்த்தி – ரேவதி தம்பதியருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

Advertisment

இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு நிறைவையொட்டி, சென்னை மெரினா கடற்கரை வான்வெளியில், விமானப் படையின் சாகச நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) நடைபெற்றது. இந்திய விமானப்படையின் பலத்தை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அனைத்து ரக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இடம்பெற்று சாகசம் நிகழ்த்தின. இந்த பெருமைமிகு நிகழ்வை லட்சக்கணக்கான மக்கள் மெரினாவுக்கு கண்டு களித்தனர்.  இந்திய விமானப் படையினர் வானத்தில் நிகழ்த்திய விமான சாகசங்களை சென்னை மக்கள் வியப்புடன் பார்த்தனர். 

இதற்கிடையில் விமான சாகசத்தின் நிகழ்வுகள், தமிழில் வர்ணனை செய்யப்பட்டது சென்னை மக்கள் மிகவும் நெருக்கமாக இருந்தது. இந்த தமிழ் வர்ணனையை செய்தது தமிழகத்தைச் சேர்ந்த பைலட் கார்த்திக் மற்றும் அவரது மனைவி ரேவதி தம்பதியர்தான். கார்த்திக் -ரேவதி இருவரும் தமிழில் தடையின்றி சரளமாகப் பேசி வர்ணனை செய்து அசத்தினார். இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் கார்த்திக் - ரேவதி தம்பதியருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். பலரும் அவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு செல்ஃபி எடுத்தனர்.

பின்னர் இருவரும் பாலிமர் டிவிக்கு அளித்த பேட்டி அளித்தனர். அப்போது பைலட் கார்த்திக் கூறியதாவது, “நீங்கள் பார்க்கிற விமான சாகச நிகழ்ச்சி 2 மணி நேரம் மட்டுமே நடந்திருந்தாலும்கூட, இதற்கு பின்னால் நிறைய உழைப்பை செலுத்தியிருக்கிறோம். சென்னை பார்வையாளர்களுக்கு பெரிய நன்றி. 

கணவன் – மனைவியாக வர்ணனை செய்யும் வாய்ப்பு பொதுவாக யாருக்கும் கிடைக்காது. ஆனால், அதிர்ஷ்டவசமாக கிடைத்த இந்த மாதிரி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தோம். நல்ல வகையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டோம் என்று நினைக்கிறேன். 

நாங்கள் இருவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள். இதே மாதிரி 21 வருடத்திற்கு முன்பு, இதே மாதிரி மெரினா கடற்கரையில், இதே மாதிரி ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து பைலட் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு பைலட் ஆனவன்தான் நான். இப்போது, அதே மாதிரியான ஒரு நிகழ்ச்சியை நானே தொகுத்து வழங்கினேன் என்பது மகிழ்ச்சி. இந்த வாய்ப்பு, தமிழ் தெரியும், தமிழ் ஆளுமை என்பது மட்டுமில்லாமல், வழக்கமாக இதுபோல பேசுவதனால் இந்த வாய்ப்பு கிடைத்தது.” என்று கூறினார். 

அதே போல, கார்த்திக்கின் மனைவி ரேவதி கூறுகையில், ”தமிழ் மொழியை யாருக்குதான் பிடிக்காது. தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து, சென்னையிலேயே இருந்து நிறைய கேட்டு பரிச்சயமான ஒரு மொழி. அந்த மொழியில் ஒரு தீராக் காதல் இருக்கிறதனால், இந்த வாய்ப்பு கிடைத்தது. இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். 

எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. இவரைப் போல நிறைய வீரர்களுடன் மேடையைப் பகிர்ந்துகொண்டதில் ரொம்ப பெருமை. தமிழ்நாடு மட்டுமல்லாமல் ராணுவத்தில் இருக்கிறவர்களின் மனைவிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சார்பில் இன்றைக்கு நான் கலந்துகொண்டதாக நினைக்கிறேன். 

இந்த நிகழ்ச்சியால் கண்டிப்பாக ஒரு தாக்கம் இருக்கும். இந்த மாதிரி விமான சாகச நிகழ்ச்சியைப் பார்க்கிற குழந்தைகள், மாணவர்கள் நாமும் இந்த மாதிரி வானத்தில் அழகாக பறக்க மாட்டோமா ஒரு ஆசை வரும் இல்லையா? நம்மால் இதை செய்ய முடியவில்லை ஆனால், இந்த வீரர்கள் எளிதாகச் செய்கிறார்கள். ஆனால், இதன் பின்னால், நிறைய உழைப்பு இருக்கிறது. நிறைய தியாகம் இருக்கிறது. ராணுவ வீரர்கள் நமக்கு தெரியாத இடத்தில் எல்லாம் போய் வேலை செய்துதான் நமது நாட்டை காப்பாற்றுகிறார்கள். அதையெல்லாம் வீர சாகசம் செய்து காட்டும்போது, நாமும் இதைப்போல வர வேண்டும் என்று ஒவ்வொரு தமிழனும் நினைக்க வேண்டும். தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இதே போல நிறைய பேர் முன்னாடி வர வேண்டும். செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே, எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே, ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai Tamil Air Force
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment