scorecardresearch

சென்னையில் 83 ஆண்டு பழமையான சலூன்.. இந்த நடிகரெல்லாம் வாடிக்கையாளர்கள்: கையில இருக்க காச கொடுத்தா போதும்!

Chennai Tamil News: 83 வருட பழமையான சலூன் கடையின் வெற்றிப் பயணத்தை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

சென்னையில் 83 ஆண்டு பழமையான சலூன்.. இந்த நடிகரெல்லாம் வாடிக்கையாளர்கள்: கையில இருக்க காச கொடுத்தா போதும்!
இந்த சலூனுக்குள் ஒருவர் அமைதியான உணர்வைப் பெறலாம். (Express Photo)

Chennai Tamil News: 383 வருட பழமையான ஊராக விளங்கும் சென்னையில் மக்கள் பல்வேறு விதமான வாழ்க்கைக் கதைகளுடன் உலாவி வருகின்றனர். சென்னை மக்களின் கதைகள் அனைத்தும் நம்மை உத்வேகப்படுத்த தவறியதே இல்லை.

அப்படிப்பட்ட கதைகளில் ஒன்றான 83 வருட பழமையான சலூன் கடையின் வெற்றிப் பயணத்தை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

1939 ஆம் ஆண்டு கேரளாவின் திருச்சூரில் உள்ள ‘வளக்கத்தாரா ஹவுஸ்’ என்றழைக்கப்படும் சிகையலங்கார நிபுணர்களின் குடும்பத்தைச் சேர்ந்த வி.சங்குனி நாயரால் தொடங்கப்பட்டது இந்த சலூன். சென்னை பாண்டி பஜாரில் உள்ள இந்த சலூன் இன்றும் தினமும் சுமார் 50 பேருக்கு சேவை செய்து வருகிறது.

சங்குனி நாயரிடம் இருந்து, கடையை 1970 களில் அவரது மகன் எஸ்.அரவிந்தாக்ஷனும் பெற்று நடத்தி வந்தார். பின்னர் 1990களின் முற்பகுதியில் அவரது பேரன் ஏ.சந்தீப் (42) பொறுப்பை பெற்று நடத்தி வருகிறார்.

‘கேரளா ஹேர் ட்ரெஸ்ஸர்ஸ்’ சலூனில் உரிமையாளர் சந்தீப்

“எங்கள் தாத்தா கேரளாவில் இருந்து இங்கு வந்து இந்த சலூனை ஆரம்பித்ததால் எங்களுக்கு ‘கேரளா ஹேர் டிரஸ்ஸர்ஸ்’ என்று பெயர் வந்தது. அவர் 1929 இல் சென்னைக்கு வந்தார், பாண்டி பஜாரில் ஒரு கடையை அமைப்பதற்கு முன்பு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல கடைகளில் வேலை செய்தார், ”என்று சந்தீப் கூறுகிறார்.

சுவரில் இருக்கும் பெரிய கடிகாரம் முதல் ரோட்டரி ரக கருப்பு டெலிபோன் வரை தேசியக் கொடி ஓவியங்கள் மற்றும் பல பழங்காலப் பொருட்களை இங்கு காணலாம். மரத்தாலான பேனல்கள், தேக்கு மரத்தால் செய்யப்பட்ட சலூன்-பாணி ரோலர் நாற்காலிகள் அந்த இடத்திற்கு மேலும் வசீகரத்தை கூட்டுகிறது.

ஒருவர் சலூனுக்குள் கால் வைத்த தருணத்திலிருந்து, ஒரு அமைதியான உணர்வைப் பெறலாம். ஆடியோ பிளேயரின் பிரார்த்தனை கோஷங்கள் மற்றும் சிகையலங்கார நிபுணர்களின் கத்தரிக்கோலிலிருந்து தொடர்ந்து “ஸ்னிப் ஸ்னிப் ஸ்னிப்” என்ற சத்தம் ஆகியவற்றிற்கு மத்தியில், நகரத்தில் உள்ள மற்ற சலூன்களுடன் ஒப்பிடும்போது இங்கு அதிக உரையாடல்கள் நம்மால் கேட்க முடியாது.

“1971-ம் ஆண்டு தொலைபேசி இங்கு வந்தது. என் தந்தை அதைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார், பின்னர், சில ஆண்டுகளுக்குப் பிறகு, அதைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதனால் அதை ஒரு பெட்டியில் வைத்தார். ஆனால் நான் பழங்காலப் பொருட்களை விரும்புபவன் என்பதால், நான் என் தந்தையிடம் கேட்டேன், ஆனால் அவர் அவற்றை எங்கு வைத்திருந்தார் என்பதை மறந்துவிட்டார். பின்னர், வீடு முழுவதும் தேடியதில் 1993ஆம் ஆண்டு பெட்டியில் இது கிடைத்தது. நான் கேபிள்களை மாற்றினேன், 2019 முதல், அது மீண்டும் வரவேற்புரையில் வைத்துள்ளேன். இது சலூனிற்கு மேலும் ஒரு அழகை கொடுக்கிறது,” என்கிறார் சந்தீப்.

பெரிய கடிகாரத்தை சுட்டிக்காட்டி, சந்தீப் கூறியதாவது, “என்னுடைய தாத்தாவின் சிறந்த நண்பர், வாட்ச் மெக்கானிக்காக இருந்தார், அவரை நாங்கள் வேணு மாமா என்று அழைப்போம், அவர் என் தாத்தாவிற்கு இந்த கடிகாரத்தை பரிசளித்தார். இந்த சலூன் நாற்காலிகளை எல்லாம் என் தாத்தாவிடம் அறிமுகம் செய்தவர் அவரே.

அந்த காலக்கட்டத்தில் கூட ஒரு நாற்காலிக்கு 17 ரூபாய் விலையாக இருந்தது. இதைப் பெற்று 80 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது, எல்லாம் ஒரு சின்ன பழுது இல்லாமல் இருக்கிறது, இதுவே அந்த காலத்து பொருட்களின் தரத்தை நமக்கு உணர்த்துகிறது.

சலூனில் சந்தீப் உட்பட மொத்தம் ஐந்து பணியாளர்கள் உள்ளனர். அனைவரும் அந்த சலூனில் பல வருடங்களாக பணிபுரிகிறார்கள். (Express Photo)

வாடிக்கையாளர்கள் தலையைத் திருப்பினால், சிகையலங்கார நிபுணர்களின் கவனச்சிதறல் ஏற்படும் என்பதால், வாடிக்கையாளர்கள் அசையாமல் அமர்ந்திருப்பதை உறுதிசெய்வதற்காகவே இந்த ஓவியங்கள் வைத்திருக்கிறோம்”, என்று சந்தீப் கூறுகிறார்.

“நான் என் தந்தையைப் பின்பற்றுகிறேன். பக்திப் பாடல்களை இசைக்க வானொலி வைத்திருந்தார். இதைப் பலரும் பாராட்டுகிறார்கள். மற்ற கடைகளில், அவர்கள் சத்தமாக திரைப்பட இசையை இசைக்கிறார்கள், ஆனால் இங்கே வாடிக்கையாளர்கள் அமைதி மற்றும் நேர்மறை ஆற்றலை உணர்கிறார்கள். நான் ஒரு சிடி பிளேயர் வாங்கினேன், இப்போது என்னிடம் ஆடியோ சாதனமும் உள்ளது, ”என்று அவர் கூறுகிறார்.

சலூனில் சந்தீப் உட்பட மொத்தம் ஐந்து பணியாளர்கள் உள்ளனர். அனைவரும் அவரிடம் பல வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்கள். “வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக இங்கு பணிபுரிந்து வருவதால், எனது வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் விசுவாசமான வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.

வாடிக்கையாளர்கள் எங்கள் ஊழியர்களின் பெயர்களைக் கேட்டு எனது கடைக்குள் நுழைகிறார்கள். இப்போது அவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வருகிறார்கள். இது ஒரு குடும்பக் கடை போன்று மாறிவிட்டது,” என்று அவர் கூறுகிறார்.

சந்தீப் கூறுகையில், “தமிழ் சினிமாவில் இருந்து நடிகர் தங்கவேலு முதல் வி.கே.ராமசாமி, பூர்ணம் விஸ்வநாதன், இயக்குனர் சந்திரசேகர் ஆகியோர் எங்களது வழக்கமான வாடிக்கையாளர்களாக உள்ளனர். இன்றும், மூத்த தமிழ் நடிகர் சிவகுமாருக்கு நாங்கள் தனிப்பட்ட முறையில் சேவை செய்கிறோம்,” என்றார்.

“வேலையே வழிபாடு என்ற கொள்கையை கடுமையாக கடைபிடிக்கிறோம். படிப்பில் அதிக தேர்ச்சி இல்லாததால், குடும்பத் தொழிலில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன். எனது தந்தையின் ஊழியர்களுக்கு ஹேர்கட் மற்றும் ஷேவிங் செய்து பயின்றேன். என்னைத் தவிர எங்கள் தாத்தாவின் பேரப்பிள்ளைகள் அனைவரும் முதுகலைப் பட்டதாரிகள்,” என்று சொல்லி சிரித்தார். 

மேலும், “எஸ்.எஸ்.எல்.சி., முடிச்சதும் இங்கேயே வேலை செய்ய ஆரம்பித்தேன். மூன்று தலைமுறையாகியும் இன்னும் சலூனை நடத்தி வருகிறோம். எனது எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை, ”என்று அவர் கூறுகிறார்.

சந்தீப் காலை 7 மணியளவில் கடையைத் திறக்கிறார், இரவு 9 மணியளவில் தனது வேலையை நிறைவு செய்வதாக கூறுகிறார். பாண்டி பஜார் மற்றும் தி.நகர் ஆகிய இடங்களில் ஷாப்பிங் செய்பவர்கள் அதன்பிறகு தனது சலூனுக்குச் செல்வதாக அவர் கூறுகிறார், எனவே இரவு 10-10.30 மணி வரைகூட சில சமயம் வேலை நீடிக்கும் என்று கூறுகிறார்.

நாயுடு ஹால், கீதா கஃபே, சலாம் ஸ்டோர், காதி பந்தர் போன்றவை பாண்டி பஜாரில் ஆரம்பத்தில் இருந்த சில வணிகங்கள், ஆனால் இன்று நடைபாதைகளை ஒட்டி நூற்றுக்கணக்கான கடைகளைக் காணலாம்.

சுமார் 83 ஆண்டுகள் பழமையான இந்த சலூன் வாடகை இடத்தில் உள்ளது, இதற்கு முதலில் ரூ.7 வாடகையாக இருந்தது.

பல வாடிக்கையாளர்கள் தனது சலூனை ஏர் கண்டிஷனிங் செய்ய பரிந்துரைத்தாலும், சந்தீப் அதன் அமைப்பை மாற்ற விரும்பவில்லை. “நாங்கள் வணிக வகையின் கீழ் வருவதால், மின்சாரம் [பில்] மற்றொரு காரணியாக இருக்கிறது. அதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன்,” என்றார்.

இன்றைய மற்றும் பழைய வாடிக்கையாளர்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி கேட்டதற்கு, முந்தைய தலைமுறையினர் மிகவும் ஒழுக்கமானவர்கள், ஆனால் இப்போது விஷயங்கள் மாறிவிட்டன என்று சந்தீப் கூறுகிறார். இருப்பினும் இளைய தலைமுறையை அவர் குறை கூறவில்லை. 

வாடிக்கையாளர்கள் வெவ்வேறு வகையான ஹேர்கட்களைக் கேட்டாலும், சந்தீப் குட்டையான ஹேர்கட்களையே விரும்புகிறார். கடந்த காலத்தில் பெண்கள் அவரது சலூனுக்குச் சென்றதில்லை ஆனால் இப்போது இளம் பெண்கள் விரைவாக முடி வெட்டுவதற்காக வருகைதருகிறார்கள்.

“ஸ்டெப் கட்டிங்’ போன்ற பல்வேறு வகையான சிகை அலங்காரங்கள் உள்ளன, ஆனால் குறுகிய ஹேர்கட் போன்ற எதுவும் ஒரு நபருக்கு கவர்ச்சியை சேர்க்காது. முடி வளர்ச்சி நன்றாக இருக்கும், முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் இருக்காது. சாயமிடுதல், நேராக்குதல் மற்றும் ப்ளீச் மற்றும் ஃபேஷியல் போன்ற செயற்கை முறைகளை நான் அறிவுறுத்துவதில்லை. 

வாடிக்கையாளர்கள் அவற்றை விரும்பினால், நாங்கள் அந்த சேவைகளை வழங்குகிறோம், ஆனால் சிலநேரம் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நான் அறிவுறுத்துகிறேன், ”என்று சந்தீப் கூறுகிறார்.

சந்தீப் தனது தந்தையிடமிருந்து கற்றுக்கொண்ட ஒரு பொற்கால பாடம் என்னவென்றால், அசல் தன்மையை இழக்காமல், போட்டியில் தொடர்ந்து இருக்க சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பது தான்.

“நாம் இருப்பது போல் தான் இருக்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் சற்று வயதானவர்கள். எங்கள் சலூனுக்கு அதிக இளைஞர்கள் வருவதில்லை. ஆம், வருகை குறைந்துள்ளது, ஆனால் எங்களிடம் இன்னும் விசுவாசமான வாடிக்கையாளர்கள் இருப்பதால் அதை ஒரு பிரச்சினையாக நான் பார்க்கவில்லை. என்னிடம் இங்கு கட்டண அட்டை இல்லை; மக்கள் தங்களிடம் இருப்பதைக் கொடுக்கிறார்கள், ”என்று அவர் கூறுகிறார்.

“நான் முடி வெட்டுவதற்கு சுமார் 180 ரூபாய் வசூலிக்கிறேன், ஆனால் மக்கள் 150 ரூபாய் கொடுத்தாலும் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். பணத்தால் வாடிக்கையாளரை இழக்க நான் விரும்பவில்லை. இது என் தாத்தா காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது. நான் 1990களில் ஆரம்பித்தபோது, ​​மதிய உணவு சாப்பிடக்கூட எங்களுக்கு நேரமிருக்காது. அப்போது சில சலூன்கள் மட்டுமே இருந்தன. இந்தப் பகுதியைச் சுற்றி 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வாடிக்கையாளர்கள் இங்கு வருவார்கள்,” என்கிறார்.

இவரது கடையில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தமிழ் வாடிக்கையாளர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப சேவைகளை வழங்குகிறார்கள். 

“இன்று பல பியூட்டி பார்லர்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றன. அவர்கள் ஹிந்தி மற்றும் உள்ளூர் மொழியைப் பேசுகிறார்கள். இதனால் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கேட்ட ஹேர் ஸ்டைல் கிடைப்பதில்லை, மொழியினால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது, ”என்று அவர் மேலும் கூறுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Chennai tamil news oldest saloon shop in chennai