க.சண்முகவடிவேல்
சென்னையில் இருந்து, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை செல்பவர்கள் இனி பல்லவன் அதிவிரைவு ரயிலையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கான இணைப்பு ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மாலை நேரத்தில் சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறைக்கு வர செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே உள்ளது. மற்ற ரயில்கள் எல்லாம் இரவில்தான் புறப்படுகின்றன. செந்தூர் எக்ஸ்பிரஸ் மாலை 4.05-க்கு எழும்பூரில் புறப்படும். அது விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக செல்லும்.
அதனால் மாலை நேரங்களில் சென்னையில் இருந்து ஊர் திரும்புகிறவர்கள் அந்த ரயிலை பயன்படுத்துகின்றனர். இனி பல்லவன் ரயிலை பயன்படுத்தியும் ஊர் திரும்பலாம். தற்போது மாலை 3.45 மணிக்கு எழும்பூரில் புறப்படும் பல்லவன் ரயிலில் சென்று விழுப்புரத்தில் இறங்கி அங்கிருந்து மயிலாடுதுறை பயணிகள் ரயில் மூலம் கடலூர், சிதம்பரம், சீர்காழி மயிலாடுதுறைக்கு செல்லலாம்.
அதற்காக சென்னை – காரைக்குடி பல்லவன் அதிவிரைவு மற்றும் விழுப்புரம் – மயிலாடுதுறை ரயில்களுக்கான நேரம் மாற்றப்பட்டு இருப்பதால் இரண்டு ரயில்களுக்கும் இணைப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மாலை 6:05-க்கு விழுப்புரம் வந்த பல்லவன் இனி 6 மணிக்கே வரும். அதேபோல் மாலை 5:45-க்கு விழுப்புரத்தில் இருந்து கிளம்பிய மயிலாடுதுறை பாசஞ்சர் இனி 6:10-க்கு கிளம்பும்.
இதை பயன்படுத்தி சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து பல்லவனை பிடித்தும் இனி மயிலாடுதுறைக்கு வந்து விடலாம். பெரும்பாலும் பல்லவன் விழுப்புரத்தில் 4-வது நடைமேடைக்கு மாலை 6 மணிக்கு வரும். பல்லவனில் இருந்து இறங்கி 6:10-க்கு 3-வது நடைமேடையில் கிளம்பும் மயிலாடுதுறை வண்டியை பிடிக்கலாம்.
இதனால் சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை செல்பவர்கள் செந்தூர் ரயிலுக்கு முன்பே ஊர் வந்து சேரலாம். தனித்தனி டிக்கெட் வாங்க தேவையில்லை, எழும்பூரில் ஒரே டிக்கெட்டாகவே எடுத்துக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“