சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு அதிகம் பேர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களில் புதுச்சேரி நகரமே சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும். புதுச்சேரியில் திரும்பும் திசை எல்லாம் விதவிதமான மதுக்கடைகள், ரெஸ்ட்டாரண்ட், ரெஸ்டோபார்கள் இருக்கும். வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க பலரும் அங்கு சென்று வருவர். இந்தநிலையில் இதற்கு மேலும் ஒரு படி மேலாக செல்லும் வழியிலே வைப் செய்யும் படி மைக்ரோ ப்ரூவரி நிறுவனமான கேடமரன் ப்ரூயிங் கோ சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு முதன்முதலாக 'பீர் பஸ்' அறிமுகம் செய்துள்ளது.
Advertisment
ஒரு நபருக்கு ரூ.3000 என்ற விலையில் ஏப்ரல் 22-ம் தேதி தனது முதல் பயணத்தை தொடங்க உள்ளது. இந்த பீர் பஸ் பயணத்தில் 3 வேளை உணவு, அன்லிமிடெட் கிராஃப்ட் மற்றும் பீர் தயாரிப்பு ஆலைக்கு சுற்றுலா என பல்வேறு அனுபவங்களை வழங்க உள்ளது. பேருந்துக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. முதல் பயணத்திற்கான வரவேற்பைப் பொறுத்து, அடுத்தடுத்த பயணங்கள் திட்டமிடப்பட உள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேடமரன் ப்ரூயிங் கோ நிறுவனர் பிரசாத் ராதாகிருஷ்ணன் கூறுகையில், " 'பீர் பஸ்' என்று அழைக்கப்படுவதால் பஸ்ஸில் பீர் வழங்கப்படும் என அர்த்தம் கொள்ளக் கூடாது. பேருந்தில் கட்டாயம் பீர் வழங்கப்பட மாட்டாது. புதுச்சேரியில் உள்ள சிறந்த இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படும். அரசு அனுமதித்த இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படும். சென்னையிலிருந்து புறப்பட்டு அன்றைய தினமே திரும்பி விடலாம்.
சமூக வலைதளங்களில் இதுகுறித்து தெரிவித்ததும், இது இவ்வளவு வைரலாகும் என நாங்கள் நினைக்க வில்லை. பலர் எங்களிடம் பஸ்ஸை தினமும் இயக்க வேண்டும் என்று கேட்கின்றனர்" என்று சிரித்தபடி சொன்னார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், "சுற்றுலாவின் போது 9 வகையான கிராஃப்ட் பீர் வழங்கப்படும். இந்திய கோடைக்காலம் (பெல்ஜிய விட்பையர்), ஹாப்சுனாமி (இந்திய பேல் ஆல்), சிங்காரி சைடர் (உலர் ஆப்பிள் சைடர்), மற்றும் வோக்ஸ் பாபுலி (டார்க் லாகர்) ஆகியவைகள் வழங்கப்படும்.
கிராஃப்ட் பீர்கள் வணிக பியர்களைப் போலல்லாமல், கொஞ்சம் தான் குடிக்க வேண்டும். அதிகளவு குடிக்க கூடாது. இது அறிவு சார்ந்த சுற்றுலாவும் கூட. தானியங்களில் இருந்து பீர் எவ்வாறு செய்யப்படுகிறது என்பது குறித்து மதுபான தயாரிப்பவர்கள் சுற்றுலாவின்போது விளக்குவார்கள். இது மக்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்" என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“