பசிக்கு சாப்பிடுவது என்பது வேறு. ருசிக்கு சாப்பிடுவது என்பது வேறு. பசி ருசி அறியாது என்பார்கள்.ஆனால், பசியோடு இருக்கும் போது ருசியான சாப்பாடு கிடைத்தால் வயிறு அளவறியாது இதுதான் நிதர்சனம். பிரபலமான ஒரு தமிழ் படத்தில் நடிகர் செந்தில் சொல்லும் ஒரு அருமையான வசனம் இன்றைய தலைமுறையினருக்கு வெகுவாக பொருந்தும்.
”ஓடியாடி உழைச்சி சம்பாதிக்கிறது எதுக்கு... இந்த கால்ஜான் வயித்துக்கு தானா அது ஒழுங்கா சாப்படணும்” இன்றைய இளைஞர்கள் பலருக்கும் இந்த பீட்சா, பர்கர், பாஸ்ட் ஃபுட் உணவுகளின் மீதுதான் அதிகப்படியான நாட்டம் செல்கிறது. என்னத்தான் ஹோட்டலில் தினமும் சாப்பிட்டாலும் அம்மா கையில ஒருநாள் சாப்பிட்டு பாருங்க அந்த ருசியே வேற.
அதே மாதிரி தான் பர்கர், சேன்விட்ச் பார்க்க நல்ல கலர்ஃபுல்லா இருக்கும். ஆனா ருசி சுமார் ரகம் தான். தமிழ்நாடு சாப்பாடுனு சொன்னாலே மீன் குழம்பு, இறால் தொக்கு, நண்டு கிரேவி, ஆட்டுக் கால் பாயானு வரிசையா நம்ம கண்முன்னாடி எல்லா ஐயிட்டமும்(சாப்பாடு) வந்து போகும்.
செட்டிநாடு' இந்த பெயரை கேட்டவுடனேயே நம்மில் பலருக்கு வாயில் எச்சில் ஊரும். அந்த அளவுக்கு ஒரேஒரு முறை சாப்பிட்டால் கூட செட்டிநாட்டு சாப்பாட்டின் ருசிக்கு நம் நாக்கை விட்டு அகலாது. நம்ம ஊரு ‘செட்டி நாட்டுலே’ மட்டும்தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பாயிருக்கும். அதிலையும் காரைக்குடி, செட்நாட்டு உணவிற்கே தாய் வீடு மாதிரி. இவர்கள் வைக்கும் மீன் குழம்பில் தொடங்கி, சிக்கன் கிரேவி, மட்டன் சுக்கா, நாட்டுக் கோழி, காடா வறுவல் - ன்னு மெனு அடுக்கிட்டே போகலாம்.
இப்படிப்பட்ட உணவுகளை வீட்டிலியே செஞ்சி சாப்பிட யாருக்கான் தான் ஆசை இருக்காது சொல்லுங்க. ஆசை வந்திடுச்சில அப்ப சமச்சி பார்த்திட வேண்டியது தான்....
காரைக்குடி ஸ்பெஷல் செட்டிநாடு மீன் குழம்பு:
தேவையான பொருட்கள்:
1.வஞ்சரம் மீன் துண்டுகள் - 8
2. சின்ன வெங்காயம் - 100கிராம்
3. தக்காளி - 4
4.பூண்டு - 15 பல்
5.புளி கரைசல்
6.சீரகத்தூள் 1 ஸ்பூன்
7.மஞ்சள்தூள் 1 ஸ்பூன்
8.மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
9.சாம்பார் பொடி 1 ஸ்பூன்
10.நல்லெண்ணெய்
11.சீரகம்
12.பெருஞ்சீரகம்
13.வெந்தயம்
14. கறிவேப்பிலை
15.கொத்தமல்லி
செய்முறை:
1. முதலில் மீன் துண்டுகளில் மஞ்சள்தூள், உப்பை கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்
2. நல்லெண்ணெய்யை ஊற்றி சீரகம், பெருஞ்சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும். அது நன்கு வதங்கிய பின்பு பூண்டு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின் சீரகத்தூளை சேர்க்கவும்.
3. 5 நிமிடத்திற்கு பின்பு, நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், சாம்பார் பொடி, தேவையான அளவு தண்ணீர், புளிக்கரைசல் சேர்த்து 20 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
4. இப்போது ஊற வைத்த மீன் துண்டுகளை சேர்த்து, அடுப்பை குறைத்து வைத்து சில நிமிடங்கள் வேக வைக்கவும். மீன் வெந்த பின்பு மணமணக்கும் வாசனை வரும்.
5. அந்த நேரம், கொத்தமல்லி இழை மற்றும் கறிவேப்பிலை தூவி இறக்கினால் காரைக்குடி மீன் குழம்பு தயார். அப்பறம் என்ன அப்படியே எடுத்து இட்லி, சுடசுட சாதத்துடன் சாப்பிட வேண்டியது தான்.