New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/23/chidambaram-2025-06-23-11-52-43.jpg)
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் தரிசன விழா கொடியேற்றம் உற்சாகமாக நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற, பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவ கொடியேற்றத்தை முன்னிட்டு சிவ வாத்தியங்கள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க சித்சபைக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் இன்று காலை உற்சவ ஆச்சாரியார் யு.எஸ்.சிவசைலாஸ் தீட்சிதர் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் பசுக் கொடியை ஏற்றினார்.
பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி வீதி உலா நடைபெறும். இதன் விபரம் வருமாறு:
ஜூன் 24-ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா,
25-ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா,
26-ம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா,
27-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்),
28-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா,
29-ம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா,
30-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெறுகிறது.
ஜூலை 1-ம் தேதி செவ்வாய்க்கிழமை மூலவர் நடராஜர் தேரில் எழுந்தருள தேர்த்திருவிழா கோலாகலத்துடன் நடைபெறும். இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
ஜூலை.2-ம் தேதி புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.
பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.
ஜூலை 3-ம் தேதி வியாழக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவும், ஜூலை 4-ம் தேதி வெள்ளிக்ழமை தெப்போற்சவத்துடன் உற்சவம் முடிவடைகிறது.
உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் த.சிவசுந்தர தீட்சிதர், துணைச் செயலாளர் சிஎஸ்எஸ் வெங்கடேச தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர். ஆனித் திருமஞ்சன தரிசனத்தை முன்னிட்டு ஜூலை இரண்டாம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.