/tamil-ie/media/media_files/uploads/2017/08/royal-chair.png)
சரவணக்குமார்
கட்டளைக்கு காத்திருக்கும் அதிகாரிகள். கைதட்டி அழைத்ததும், கைகட்டி நிற்கும் ஆட்கள். ‘தங்கத் தலைவா... தலைமை ஏற்க வா... தம்பிகள் இருக்கிறோம். தாங்கிப்பிடிக்க...’ என குரல் கொடுத்து தரிசனத்திற்கு ஏங்கிக்கிடக்கும் ரத்தத்தின் ரத்தங்கள். ஐந்து வருடங்களுக்கு பெயரைச் சொல்லிச்சொல்லி அலுத்துப்போன அச்சு இயந்திரங்கள். முகத்தை சிறைபிடிக்க காத்துக்கிடக்கும் மீடியா கேமராக்கள். இவைகளெல்லாம் உங்களுக்கும் கிடைக்கலாம். அதெப்படி?
உங்கள் ஜாதகத்தில் கீழே காணப்போகும் யோகங்கள் இருந்தால் சாத்தியமே.
அகண்ட சாம்ராஜ்ய யோகம்
அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாதவனைக் கூட அரசனாக்கும் சக்தி உள்ளது இந்த யோகம். இன்றைய காலகட்டத்தில் அமைச்சர், முதலமைச்சர், கவர்னர், பிரதமர் என்பது போன்ற உச்சகட்ட பதவிகளை இது குறிக்கிறது.
2, 9, 11 ம் பாவாதிபதிகள் சந்திரனுக்கு 1, 4, 7, 10 எனப்படும் கேந்திரத்தில் இருக்க, குரு 5, 11 ம் பாவாதிபதியாகி 2 ம் இடத்தில் இருக்க வேண்டும்.
அல்லது குரு 2, 5, 11 ம் இடத்தில் இருக்க, குரு நின்ற வீட்டின் அதிபதி, சந்திரனுக்கு 1, 4, 7, 10, 5, 9 ஆகிய ஏதோ ஓரிடத்தில் இருக்க வேண்டும்.
மேற்குறிய இரண்டுவித அமைப்புகளில் எது இருந்தாலும் அது அகண்ட சாம்ராஜ்ய யோகமே.
அரசாட்சி யோகம்
அரசியலில் பெரிய பதவிகள் வகிக்க காரணமான யோகங்களில் இதுவும் ஒன்று. அது மட்டுமல்லாமல் இந்த யோகத்தின் மூலம் அரசாங்க உயரதிகாரியாகவும் ஆகலாம்.
குரு நின்ற ராசியாதிபதி, சந்திரனுக்கு கேந்திரத்திலும் (1, 4, 7, 10), சந்திரன் நின்ற ராசியாதிபதி சுக்கிரனுக்கு கேந்திரத்திலும் இருந்தால் இந்த யோகம் ஏற்படும்.
ராகு நின்ற ராசியாதிபதி லக்கினத்திற்கு, சுக்கிரனுக்கு கேந்திரத்தில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு என்று சொல்லப்படுகிறது.
சக்கரவர்த்தி யோகம்
ஆட்சி செய்வதற்குரிய அத்தனை தகுதிகளையும் இந்த யோகம் கொடுக்கும். ஒருவேளை ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும் அதற்கு நிகரான அந்தஸ்தை தந்துவிடும். பெரிய தர்மப்பிரபுவாகவும், தெய்வத் திருப்பணிகளில் ஈடுபாடு கொண்டவராகவும் இவர்கள் இருப்பார்கள்.
லக்கினாதிபதி உச்சம் பெற்று, அவருடன் 2, 9 ம் பாவாதிபதிகள் இணைந்து 10 ம் அதிபதி பலம் பெறுவது சக்கரவர்த்தி யோகம்.
அரச கேந்திர யோகம்
லக்கனத்திற்கு 1, 4, 7, 10ல் அனைத்து கிரகங்களும் இருந்து அவை ஆட்சி உச்சம் என்கிற உயரிய நிலையில் இருந்தால் உருவாவது இந்த யோகம்.
வாழ்க்கையில், நினைத்துப் பார்க்க முடியாத அளவு அனைத்து வசதிகளையும் பெற்றுத் தரும். மேலும் பெரிய அளவில் மக்கள் சக்தியை தன்பால் ஈர்க்கும் வல்லமையும் கொண்டது.
கலாநிதி யோகம்
குரு 2 அல்லது 5 ம் வீட்டில் இருந்து புதன், சுக்கிரனுடன் சேர்ந்திருந்தாலும் அல்லது 2, 5 ம் இடங்கள் புதன், சுக்கிரனின் ஆட்சி வீடாக இருந்தாலும் இந்த யோகம் ஏற்படும்.
அறிவுக்கு பஞ்சம் இருக்காது. நல்ல திறமையையும் புத்திசாலித்தனத்தையும் கொடுக்கும். அரசியலில் பிரகாசிக்கும் வாய்ப்போ அல்லது அரசாங்க உயர் பதவிகள் வகிக்கும் வாய்ப்போ பெற்றுத்தரும் யோகம் இது.
சக்கர வியூக யோகம்
ராகு, கேது தவிர மற்ற ஏழு கிரகங்களும் ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில், ராசிக்கு ஒரு கிரகம் வீதம் இருந்து, இந்த ராசிகளில் ஏதோ ஒன்று லக்கினமாக அமைவது சக்கர வியூக யோகம்.
தலைமைப் பதவிக்கு தகுதியான யோகம் இது. சிறந்த அறிவாளியாகவும், சாதுர்யம் மிக்கவராகவும் இவர்கள் இருப்பார்கள். செல்வமும், செல்வாக்கும் குறைவில்லாமல் இவர்களிடம் இருக்கும்.
இந்த யோகம் அரிதிலும் அரிதான ஒன்று.
சக்கர யோகம்
எம்.எல்.ஏ முதல் ஜனாதிபதி வரை எந்த பதவி வேண்டுமென்றாலும் இந்த யோகம் உள்ளவர்களுக்கு கிடைக்கலாம். இதற்கு மூன்று வித யோக நிலைகள் கூறப்பட்டுள்ளன. இதில் எது இருந்தாலும் ஓகே.
ராகு, கேது தவிர மற்றைய ஏழு கிரகங்களும் ஒற்றைப்படை ராசி எனும் ஆண் ராசிகளில் இருக்க வேண்டும்.
10 ம் இடத்தில் ராகு இருக்க, அந்த வீட்டின் அதிபதி லக்கினத்தில் இருக்க, லக்கினாதிபதி 9 ல் இருக்க, இவர்கள் சுபகிரகங்களால் பார்க்கப்பட வேண்டும்.
10 ல் ராகு இருக்க, அவ்வீட்டுக்குடையோன், 1, 5 லிருக்க 9 ம் பாவாதிபதி 7 ல் இருக்க வேண்டும்.
கஜகேசரி யோகம்
சந்திரனுக்கு 1, 4, 7, 10 ஆகிய கேந்திரத்தில் குரு இருந்தால் உருவாவது கஜகேசரி யோகம்.
குருவும், சந்திரனும் ஆட்சி, உச்சம், நட்பு என்கிற நிலையில் இருந்தால் மட்டுமே இந்த யோகம் முழு பலனை அளிக்கும். இல்லையெனில், இதற்கான பலன் குறையக்கூடும்.
இந்த யோகம் அமையப்பெற்ற நபர்கள், எந்த கஷ்டங்களையும் எளிதில் கடந்துவிடுவார்கள். துன்பங்களெல்லாம் தூசி தான் இவர்களுக்கு. வாழ்க்கையில் மிக உயரிய இடத்திற்கு செல்லக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள். செல்வம், செல்வாக்கு, புகழ், அந்தஸ்து ஆகியவற்றுடன் கூடிய தலைமைப் பதவி இவர்களைத்தேடி தானே வரும்.
இந்த யோகங்கள் மட்டுமில்லாமல் இன்னும் நூற்றுக்கணக்கான யோகங்கள் மூலநூல்களில் சொல்லப்பட்டுள்ளன. இவைகள் உங்கள் ஜாதகத்தில் இருந்தாலும், அரசு கிரகமான சூரியனும், சந்திரனும் நல்ல நிலையில் இருக்க வேண்டியது மிக முக்கியம்.
அட... அதுக்குள்ளேயும் கலர் கலர் கனவு உங்க கண்ணில் தெரியுதே. கூடிய சீக்கிரம் ‘மாண்புமிகு’வாக மாறப்போற உங்களுக்கு இப்பவே அட்வான்ஸ் வாழ்த்துக்கள். போஸ்டிங் கிடைச்ச உடனே, நம்ம கையிலேயும் ஒன்றியம், வாரியம்னு எதையாவது குடுத்தீங்கன்னா புண்ணியமா போகும். அய்யா பார்த்துச் செய்யுங்க...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.