சரவணக்குமார்
“கல்யாணம் முடிஞ்சு இத்தனை மாசமாகியும் இன்னும் ஒரு புழு பூச்சியும் இல்லையா?”
வேலைவெட்டி இல்லாத அக்கம்பக்கத்தவர்களும், ஜாதி மத பேதமில்லாமல் அத்தனை உறவுகளும் கேட்கும் கேள்வி இது.
குழந்தை இல்லாததால் ஏற்படும் வேதனையும் அவமானங்களும் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம். குறை யாரிடம் இருந்தாலும் மலடி எனும் படித்து வாங்காத பட்டத்தை இச்சமூகம் பெண்களுக்கே கொடுத்துவிடும்.
அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத பிளாட்பாஃர்ம் வாசிகளுக்கு வகைதொகை இல்லாமல் பிள்ளைகள் பிறப்பதும், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவனுக்கு அடுத்த வாரிசு என்பதே இல்லாமல் போவதும் கிரகங்களின் விளையாட்டு என்பதைவிட வேறு என்ன சொல்லிவிட முடியும்?
தமிழ்நாட்டில் காசு பணத்திற்கு குறைவில்லாத கோடீஸ்வர தொழிலதிபரின் வீட்டில் ஒரு குறை. அக்குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக பிள்ளைச்செல்வம் என்பதே கிடையாது. அனைவருமே சுவீகாரம் பெறப்பட்டவர்கள் தான். அவர்களின் மூதாதையர்களின் காலத்தில் ஏற்பட்ட ஏதோ ஒரு சாபத்தால் இவ்வாறு நடந்திருக்கலாம். இதையும் ஜெனன கால ஜாதகத்தைக் கொண்டு துல்லியமாய் நம்மால் அறிந்துகொள்ள முடியும்.
குறைவற்ற குழந்தைச் செல்வம் கிடைக்கும் பொறுப்பை கையில் வைத்திருப்பவர் குரு பகவான். இதனாலேயே இவருக்கு புத்திரகாரகன் என்னும் பெயர் உண்டு.
இவர் ஆட்சி உச்சம் பெற்று நல்ல இடங்களில் இருந்தால் பிள்ளைப்பேறு பற்றிய கவலையை தள்ளிவைத்து விடலாம்.
ஆண்களுக்கு ஐந்தாம் இடமும், பெண்களுக்கு ஐந்து, ஒன்பதாம் இடமும் புத்திர ஸ்தானம் என்றழைக்கப்படுகிறது. இவ்விடம் பாவ கிரக சேர்க்கையின்றி சுப பலம் பெறுவது அவசியம்.
ஐந்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்து, குரு பகவான் நல்ல நிலையில் இருந்தால், காலதாமதம் ஏற்பட்டாலும் புத்திர பாக்கியம் உண்டு.
பாவ கிரகங்களாகிய சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியவை புத்திர ஸ்தானத்தில் இருந்தாலும் தோஷமே. மேலும் புத்திர ஸ்தானாதிபதி பலம் இழந்து போவதும், 6, 8, 12 – ஆகிய இடங்களில் மறைவதும், பாவ கிரகங்களோடு சேர்க்கையோ பார்வையோ பெறுவதும் மழலையை தர மறுக்கும்.
எந்த ஒரு இடமும் (பாவம்) விருத்தி பெறவேண்டுமென்றால் அதற்கு எட்டாமிடத்தில் எவ்வித பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. இதன்படி, 5- ம் இடத்திற்கு 8- ம் இடம் என்பது 12 – ம் இடமாகும். இவ்விடம் சுப பலத்தோடு இருப்பதே நல்லது.
குழந்தை பேறு தருபவர் குருபகவான் என்றால், அதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர் புதனும், சனியும். இவ்விருவரையும் அலி கிரகம் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
புதனின் வீடுகளாகிய மிதுனத்திலோ, கன்னியிலோ அல்லது சனியின் வீடுகளாகிய மகரம், கும்பத்திலோ ஐந்தாம் வீட்டின் (புத்திர ஸ்தானம்) அதிபதி இருந்தால் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை.
மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் ஏதோ ஒன்று புத்திர ஸ்தானமாக வந்து, அவ்வீட்டின் அதிபதி அங்கேயே இருந்தால், புத்திர தோஷம் அடிபட்டுப்போய், வாழ்நாள் முழுதும் மகிழும் வகையில் வாரிசை கொடுத்துவிடும்.
மேலே சொன்ன விதியையும், அடுத்ததாகச் சொன்ன விதிவிலக்கையும் ஊன்றி கவனித்தால் தெளிவாக புரியும்.
மழலை செல்வத்தை தடுக்கும் மற்றொரு கிரகம் ராகு.
ஐந்தாம் வீட்டின் அதிபதியோ அல்லது குருவோ ராகுவுடன் இணைந்திருப்பது தோஷத்தை தரும்.
ஐந்தாமிடத்தில் இருக்கும் ராகுவை செவ்வாய் பார்ப்பதும், ஐந்தாம் வீடு மேஷமாகவோ அல்லது விருச்சிகமாகவோ இருந்து அதில் ராகு இருப்பதும் குழந்தை இறந்து பிறக்கும் வாய்ப்புகள் உண்டாகும்.
தனித்த ராகு பெறும் கெடுதலை செய்யாமல், செவ்வாய், சனி சம்மந்தம் ஏற்படும்போது மட்டுமே தனது வேலையை காட்டுவார்.
ஆண், பெண் இருவரது ஜாதகங்களையும் துல்லியமாக ஆராய்ந்து பார்த்தால், அவர்களுக்கு கொள்ளி வைக்க பிள்ளைகள் உண்டா இல்லையா என்பது தெளிவாகிவிடும்.
இன்றைய நவீன மருத்துவ யுகத்தில், யாரிடம் குறை உள்ளது என்பதை பணம் செலவழித்து பல பரிசோதனைகளுக்கு பிறகே கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் நமது முன்னோர்கள் பீஜஸ்புடம், சேத்திர ஸ்புடம் என்கிற இரு ஜாதக கணித முறைகள் மூலம் எளிதில் இக்குறையை தெரிந்துகொள்ளும் வழியை கூறிவிட்டு சென்றுள்ளனர். நாம் இவற்றையெல்லாம் விட்டுவிட்டு வெகுதூரம் விலகிவிட்டோம் என்பது வருத்தமளிக்கும் விஷயமே.
–