சென்னையில் பிறந்து வளர்ந்து கல்லூரி படிப்பை முடித்த நரேஷ்குமார், உலகில் உள்ள 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேலாக சைக்கிள் பயணம் செய்து மனித கடத்தலுக்கு எதிராக விழிப்புணர்வு செய்தவர். அத்துடன் கொத்தடிமைத்தனத்திற்கு எதிராக தொடர் விழிப்புணர்வுகளை செய்து, தனது சைக்கிள் பயணம் மூலம் திரட்டும் நிதியை அடிமைத்தனத்தை தடுப்பதற்கான நிதியாக வழங்கியவர். அண்மையில் அமெரிக்காவில் 6,000 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு மனித கடத்தலுக்கு எதிராக விழிப்புணர்வு செய்து உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்றார்.
இந்நிலையில், மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் நரேஷ் குமார் மாணவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.ஜி.ஆர் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் என்பதால் அக்கல்லூரி மாணவர்களுடன் அவர் உரையாடினார். அப்போது உலகம் முழுவதும் தான் மேற்கொண்ட சைக்கிள் பயணங்கள் குறித்தும், அதிலிருந்து சிரமங்கள் மற்றும் நன்மைகள் குறித்தும் நரேஷ் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
தனது பயணம் குறித்து பேசிய அவர், “2014ஆம் ஆண்டு மதுரவாயலில் இருந்து ஜெர்மனி வரைக்கும் கொத்தடிமைத்தனத்தை ஒழிப்பதற்காக சைக்கிள் பயணம் சென்றேன். தற்போது கடந்த மே, ஜூன் மாதங்களில் தொடங்கி அமெரிக்காவில் இருவர் ஓட்டக்கூடிய சைக்கிளில் 6,000 கிலோ மீட்டர் பயணம் செய்து, அதன்மூலம் 30 ஆயிரம் அமெரிக்க டாலர் நிதி திரட்டினேன். அந்த நிதியை மனிதக் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நிவாரணமாக வழங்கினேன். அனைத்தையும் செய்துவிட்டு தற்போது நான் படித்த எம்.ஜி.ஆர் கல்லூரிக்கு மீண்டும் வந்துள்ளேன். சிறுவர்களை கொத்தடிமைத்தனத்தில் தள்ளுவது ரொம்ப பரிதாபமான ஒன்று. வேலூரில் கொத்தடிமைகளாக இருந்த 40 குடும்பங்களை விழிப்புணர்வு மூலம் மீட்டெடுத்துள்ளோம். அடுத்த பயணம் பிரமாண்டமாக இந்தியாவில் இருக்கும்” என்று நரேஷ் தெரிவித்தார்.
செய்தி: சக்தி சரவணன் - சென்னை.