விளையாட்டுப் பிள்ளைகள், அப்படித்தான் இருப்பார்கள் என்று இருந்துவிடக் கூடாது!

இது நரம்பு மண்டல வளர்ச்சி தொடர்பான ஒரு குறைபாடு.

ராஜலட்சுமி சிவலிங்கம்

சில குழந்தைகள் பிறரைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கும். விளையாடினால் விளையாடிக்கொண்டே இருப்பார்கள். நினைத்ததை நினைத்தபடி செய்துகொண்டிருப்பார்கள். இது ஒரு நடத்தைப் பண்பு அல்ல, கவனக் குறைவு மிகைச் செயல்பாட்டுக் குறைபாடு (Attention Deficiency Hyperactive Syndrome) என்ற பிரச்சினைதான் இதற்குக் காரணம்.

இது நரம்பு மண்டல வளர்ச்சி தொடர்பான ஒரு குறைபாடு. இது ஒருவருடைய கற்றுக்கொள்ளுதல், கவனம் மற்றும் நடந்துகொள்ளும் விதத்தைப் பாதிக்கிறது. இந்தக் குறைபாடு கொண்டவர்கள் தொடர்ந்து அமைதியின்றிக் காணப்படுவார்கள், நினைத்ததை உடனே செய்துவிடுவார்கள்.

கவனச் சிதறல்

குழ‌ந்தைக‌ளுக்கு பிற‌க்கும் பொழுதே க‌வ‌ன‌ச் சித‌ற‌ல் அதிக‌ம் இருப்ப‌தில்லை. க‌ற்க‌ வேண்டும் என்ற‌ ஆவ‌லும் அதிக‌ம். க‌வன‌ச் சித‌ற‌லை நாம் அதிக‌ப்ப‌டுத்துகிறோம். குழ‌ந்தை ஆழ்ந்து ஒரு வேலை செய்துகொண்டிருக்கும்போது, நாம் கிள‌ம்ப‌ வேண்டும் என்றால், ந‌ம் அவ‌ச‌ர‌த்தை அக்குழ‌ந்தையிட‌ம் காண்பித்து அத‌ன் க‌வ‌ன‌த்தைச் சித‌ற‌டிப்போம்.

பின்னர் குழந்தைக்கும் அதுவே இயல்பாகிவிடும். எனவே நம் அவரசத்தைக் கூடிய வரையில் குழந்தையிடம் காட்டாமல் இருக்க வேண்டும். படிக்கும் மாணவர்கள், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்குக் கூடுதலாக தொலைக்காட்சி பார்ப்பதோ, அல்லது இணையத்தில் நேரத்தைச் செலவிடுவதோ அல்லது கணினி விளையாட்டுக்களில் ஈடுபடுவதோ, அவர்களின் கல்வி வளர்ச்சியை, பாதிப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கூறுகிறது.

விளையாட்டுப் பிள்ளைகள்!

ஆறு, ஏழு வயதில் கவனக் குறைவும் கவனச் சிதறலும் அதிகம் பாதிக்கும் குழந்தைகள் உயர்நிலைக் கல்வி அளவில் கல்வி கற்பதில் சிரமப்படுகிறார்கள் என்று பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் கபில் சாயல் கூறியுள்ளார். 11,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கவனக்குறைவு மற்றும் கவனச்சிதறல் பாதிப்பு குறித்து பெற்றோரும் ஆசிரியர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் இந்த ஆராய்சி மேலும் கூறுகிறது. விளையாட்டுப் பிள்ளைகள், அப்படித்தான் இருப்பார்கள் என்று இருந்துவிடக் கூடாது. திட்டமிட்ட முறையில் இதைத் தடுப்பதற்கான யுத்திகளை வகுத்து கவனமாக கையாளப்பட வேண்டிய விஷயம் இது.

‘குழந்தைங்கன்னாலே அப்டி இப்டிதான் இருப்பாங்க, இதப் போய் பெரிசு பண்ணிட்டு, குழந்தைங்கள அதும்போக்கிலே விட்டுவிடணும் அப்பத்தான் இயல்பா வளரும்’ என்று நம் வீட்டுப் பெரியவர்கள் கூறுவார்கள். நமக்கு நேரமில்லை என்ற காரணத்தால் இந்த வார்த்தைகளைச் சிரமேற்கொண்டு ஏற்றுகொண்டு குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது.

பொதுவாக, நாம் ஒரு விஷயத்தைக் கற்கும்போது பலவகை சிந்தனைகளில் மனம் ஈடுபட்டால், அதைக் கற்பதற்கு அதிக நேரம் பிடிக்கும். கற்பதற்கு ஒருமுகப்படுத்தப்பட்ட கவனமும் தேவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இது குறித்த ஆராய்ச்சி ஒன்றில் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விரிவான வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. அவர்கள் பூர்த்தி செய்த விடைகளிலிருந்து ஏழு-எட்டு வயதிலான குழந்தைகளின், கவனமின்மை, அதீத செயல்பாடுகள், திடீரென்று உணர்ச்சிக்கு ஆளாதல், எதிர் மறை மனோபாவம், இணக்கமற்ற நடத்தை உள்ளிட்ட பல்வேறு விதமான நடத்தை விவரங்களும் அவற்றின் அதே விகிதங்களில் அந்தக் குழந்தைகளின் உயர்கல்வி மதிப்பெண்கள் மாறுபட்டிருந்ததும் தெரியவந்தது.

எனவே, ஒரேயடியாக குழந்தைகளைக் கட்டுப்படுத்தாமல் ஆனால், மிக கவனமாக கையாளப்பட வேண்டிய தீவிரமான விஷயம் இது என்றும் இந்த ஆராய்சி கூறுகிறது.

ஆனால் அதிக நேரம் படிக்கும் மாணவர்கள், இணையம் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றிலும் அதிக நேரம் செலவழித்தால், அப்போதும் அவர்களது தேர்வு மதிப்பெண்கள் குறைகின்றன என்று இந்த ஆய்வு கோடிகாட்டுகிறது. பெற்றோர்கள் தங்கள் மகன்/மகள்கள் ஒளித்திரை கருவிகளில் செலவிடும் நேரத்தைக் குறைப்பது குறித்து பரீசிலிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

×Close
×Close