ஆர்.சந்திரன்
அசைவ உணவு பழக்கம் உள்ளவர்கள் பலர், முற்றிலும் சைவ உணவுக்கு மாறுவது, இந்தியாவில் போலவே, சீனாவிலும் படு வேகமாகப் பரவி வருகிறது. அங்குள்ள சைவ உணவுக்கான ஹோட்டல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், வெண்பன்றி, மாடு மற்றும் கோழி இறைச்சி விற்பனை அங்கே கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனித உடல் ஆரோக்கியம் குறித்த பொதுவான விழிப்புணர்ச்சியும், அசைவ உணவு வகைகளால், ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் பிரச்னைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதும் சீன மக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்துக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. சீனாவின் மிகப் பெரிய நகரமான ஷாங்காயில் அண்மைக்காலமாக புதிதாக பல சைவ உணவகங்கள் திறக்கப்பட்டு வருகின்றனவாம். 2012ம் ஆண்டில் ஷாங்காய் நகரம் முழுக்க 49 சைவ உணவகங்கள்தான் இருந்ததாகவும், இது கடந்த ஆண்டில் 100 என்ற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டதாகவும், இந்நகரத்தில் வசிக்கும் கலைஞரான ஹன் லில்லி கூறுவதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
மறுபுறம், யூரோ மானிட்டர் என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் பன்றி, மாடு மற்றும் கோழி இறைச்சிக்கான தேவை குறைந்து வருவதாகக் கூறுகிறது. சீனாடைலாக்.நெட் (chinadialouge.net) வெளியிட்டுள்ள தகவல்படி, 2014ம் ஆண்டு 4.25 கோடி டன்களாக இருந்த அந்நாட்டின் வெண்பன்றி இறைச்சி விற்பனை, 2016ல் 4.085 கோடி டன்களாகக் குறைந்துள்ளது எனவும் தெரிய வருகிறது.
இன்னொரு புறம், சீனாவுக்குள் இறக்குமதியாகும் காற்கறி, உள்ளிட்ட சைவ உணவுப் பொருட்களின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐ.நா. வெளியிட்டுள்ள பொருளாதாரத் தகவலின்படி, 2010 முதல் 2016 வரையான காலத்தில் மட்டும் சீனாவால் இறக்குமதி செய்யப்பட்ட வெண்ணெயின் அளவு 13,000 மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. இதேபோல, நார் பொருட்கள் அடங்கிய தாவர உணவும் அண்மைக்காலமாக, சீனர்களால் கணிசமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்கின்றன தகவல்கள். சின்குவா என்ற செய்தி நிறுவனம் வெளியிடும் தகவலின்படி, 2014ம் ஆண்டு மட்டும், 5 கோடி சீனர்கள் இறைச்சி உண்பதை கைவிட்டுள்ளனர்.
உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்ச்சியின் எதிரொலியாக அசைவத்தில் இருந்து சைவத்துக்கு மாற்றம் என்பது ஒருபுறம் இருக்க, "பேலியோ டயட்" போன்ற கார்போ ஹைட்ரேட்டைத் தவிர்த்து, முற்றிலும் கொழுப்பு மற்றும் புரதம் போன்ற மற்றவை அடிப்படையிலான உணவுப் பழக்கமும் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. ஆனால், அதில் அசைவம் மற்றும் சைவம் என, இரு வகை வாய்ப்புகளும் உள்ளன என்பதையும் குறிப்பிட வேண்டும்.
மறுபுறம், நாம் வசிக்கும் இடத்தை ஒட்டி..., "உள்ளூரில் கிடைக்கும் பொருட்கள்தான் அதிகபட்ச ஆரோக்கியத்துக்கு துணை நிற்கும். அவற்றை முடிந்த வரை ஃபிரஷ்ஷாக உண்பதே சிறந்தது" என்றும் இன்னொரு பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த கருத்தை பரப்புவோர், நீண்ட தொலைவில் இருந்து... மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் பொருட்கள், விலை கூடுதலாக இருப்பது மட்டுமின்றி, நமது உடலின் இயல்புக்கும் கூட இணக்கமானதாக இருப்பதில்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.
உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் சைவ உணவு வழக்கம் வேகமாக பரவி வந்தாலும், உலகில் மிக அதிக எண்ணிக்கையில் சைவ உணவு உண்பவர்களைக் கொண்ட நாடு என்றால், அது இந்தியாதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு புள்ளிவிவரத்தின்படி, 50 கோடி இந்தியர்கள் காய்கறி, பழங்கள் போன்றவற்றை மட்டும் உண்ணும் "மர"வர்கள் என தெரிய வருகிறது.
அதனால், இதே நிலை தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகள் இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் பசுமைக் கொடிதான் மிக உயரத்தில் பறக்கும் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும். தாவர உணவுப் பொருள் உற்பத்தியைப் பெருக்க, விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் தர நமது திட்டங்களையும், முன்னுரிமைகளையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.