/indian-express-tamil/media/media_files/2025/09/29/download-59-2025-09-29-17-05-42.jpg)
சீனாவின் புகழ்பெற்ற தத்துவஞானி கன்பூசியஸ், பிறந்த நாள் சரியாகக் கணக்கிடப்படவில்லை என்றாலும், கி.மு. 551 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி அவருடைய பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. குங் சங்-நீ என்கிற உண்மையான பெயரை உடைய இவர், ‘தத்துவஞானிகளின் பிதாமகர்’ எனக் கருதப்படுகிறார். உயர்ந்த சமூகத்திலிருந்து வருபவராகவும், கவிதை, இசை, இலக்கியத்திலும் சிறந்த திறமைகள் கொண்டவராகவும் அவர் புகழ்பெற்றவர்.
கன்பூசியஸ் தனது வாழ்க்கையில் முதலில் சீனாவின் லூ மண்டல மன்னரின் குடும்பத்தினருக்கு கல்வி வழங்கியவர். 30வது வயதில் ஆசிரியர் பணியை ஏற்று மாணவர்களுக்கு அன்புடன் கல்வி கொடுத்தார். பின்னர் சங் டூ மண்டலத்தில் நீதிபதியாகவும், சட்டத் துறை மந்திரியாகவும் பணியாற்றினார். அரசியல் பதவிகளிலிருந்து மனப்பூர்வமாக விலகி, சீனாவின் பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களுக்கு நல்லாட்சி மற்றும் நியாயமான அரசாங்கப் பற்றிய போதனைகள் அளித்தார்.
அவரது போதனைகள் ஊழல், கொடுங்கோன்மை நிறைந்த அந்த கால சீனாவில் நியாயத்தையும் சமூக ஒழுக்கத்தையும் கொண்டு வந்தன. போதனைகள் மூலம் அரசர்கள் மக்கள் முன்னிலையில் எப்படி நடந்து கொள்வது, மக்களின் தேவைகளை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என்பதில் அவர் வழிகாட்டியவர்.
கண்பூசியஸ் தனது சொந்த ஊர் லூவுக்கு திரும்பியபோது அங்கே சரியான மரியாதை பெற முடியவில்லை. மனச்சோர்வு, குடும்பத்தில் சோகங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நோய்வாய்ப்பட்டு, 73வது வயதில் கி.மு. 479 ஆம் ஆண்டு இறந்தார்.
கண்பூசியசின் போதனைகள் மற்றும் நூல்கள் அவரது சீடர்களால் தொகுக்கப்பட்டு பரப்பப்பட்டன. ‘புக் ஆப் ஓடிசிஸ்’, ‘புக் ஆப் டாகுமெண்ட்டேசன்’, ‘புக் ஆப் மியூசிக்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அவரது கோட்பாடுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆசியா மற்றும் உலகின் பல பகுதிகளில் அரசியல், கல்வி, சமூக வாழ்வில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
கன்பூசியசின் கொள்கைகள் மதமாகவும் மாறி, ‘கன்பூசியனிஸம்’ என உலகம் முழுதும் பரவி உள்ளது. அவருடைய போதனைகள் சமத்துவம், மனிதநேயம், கல்வியின் முக்கியத்துவம், அரசின் பொறுப்பு மற்றும் இளைஞர்களின் சுதந்திர சிந்தனை ஆகியவற்றை வலியுறுத்துகின்றன.
கன்பூசியசின் பிறந்த ஊரில் அமைந்துள்ள கோயில் மற்றும் வீடு 1994 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 14 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் 1300க்கும் மேற்பட்ட கட்டடங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளாக சீனாவை ஆட்சி செய்த அரசு அதிகாரிகள் இதனை பாதுகாத்து வருகின்றனர்.
இதன் மூலம் கன்பூசியசின் தத்துவம் மற்றும் வாழ்க்கை வரலாறு இன்று வரை உலகம் முழுதும் புகழ்பெற்று வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.