/indian-express-tamil/media/media_files/2025/08/16/chinmayi-sripada-kala-master-samantha-chinmayi-concert-2025-08-16-10-45-48.jpeg)
Chinmayi Sripada kala master Samantha Chinmayi concert
சுயமரியாதை, திறமை, உழைப்பு... இதையெல்லாம் ஒன்றிணைத்தால், அதுதான் சின்மயி! பாடகி, டப்பிங் கலைஞர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட சின்மயியின் இசைப் பயணம், பலருக்கும் ஒரு உத்வேகம். அப்படியானதொரு சக்தி நிறைந்த தருணம்தான் சமீபத்தில் நடந்த பிஹைண்ட்வுட்ஸ் சின்மயி முத்தமழை கான்சர்ட் நிகழ்ச்சி.
மேடையில் சின்மயி தனது பாடல்களால் ரசிகர்களைக் கட்டிப் போட்டிருக்க, பின்னிருக்கையில் அமர்ந்திருந்த கலா மாஸ்டர், இசையை ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது, தொகுப்பாளினி விஜே மணிமேகலை, கலா மாஸ்டரை மேடைக்கு அழைத்தார். அடுத்து நடந்ததோ, எதிர்பாராத குதூகலத் தருணம்!
கலா மாஸ்டருடன் சேர்ந்து சின்மயி ஆடிய குத்து டான்ஸ், அரங்கம் முழுவதும் இருந்த ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமைந்தது. இவர்களின் துள்ளலான நடனத்தைப் பார்த்து, முன்வரிசையில் அமர்ந்து ரசித்துக்கொண்டிருந்த நடிகை சமந்தா, சிரித்து மகிழ்ந்தார்.
நடனத்திற்குப் பிறகு உணர்ச்சிபொங்கப் பேசிய கலா மாஸ்டர், "நான் சின்மயியோட பெரிய ரசிகை. இன்னைக்கு நான் ஊருக்கு போக வேண்டியது. ஆனா அதை கேன்சல் பண்ணிட்டு சின்மயிக்காக வந்தேன். சின்மயி ஒரு சிங்கப்பெண். வாழ்க்கையில் எல்லாருக்கும் கஷ்டம் இருக்கும். ஆனா சின்மயி பட்ட கஷ்டம்... இந்த சினிமாவில் அதைத் தாண்டி வந்து ஜெயிக்கிறது சாதாரண விஷயமே கிடையாது. ஒரு பெண்ணுக்குத்தான் ஒரு பெண்ணோட கஷ்டம் தெரியும். சின்மயி, உன்னை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு. இன்னும் பேசினா நான் அழுதுடுவேன். எல்லாப் பெண்களும் சின்மயியோட கதையைக் கேளுங்க. வளர்ந்துருவீங்க.
ஒரு மனைவிக்குப் பின்னாடி கணவர் ரொம்ப முக்கியம். சின்மயியோட மாமியார் முதலில் என்ன சொன்னாங்க தெரியுமா? 'அவள் என் பிள்ளை'னு சொன்னாங்க. இதெல்லாம் சும்மா வருமா? சின்மயியோட கேரக்டர் எப்படி இருந்தா அவங்க மாமியார் இப்படிச் சொல்லியிருப்பாங்க? நான் சமந்தாவுக்கு நன்றி சொல்லணும். நல்லதுக்கும் கெட்டதுக்கும் பக்கத்துல நிக்கிறாங்கன்னா, அது ஃபிரெண்ட்ஸால மட்டும்தான் முடியும். வேற யாராலயும் முடியாது. அந்த வகையில், சமந்தா ஒரு நல்ல ஃபிரெண்ட். சமந்தா நீங்க அவளைப் பார்க்கும்போது, அவள் ரசிக்கிறதைப் பார்த்ததும் கண்ணுல தண்ணி வருது" என்று உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார்.
கலா மாஸ்டரின் உருக்கமான பேச்சைக் கேட்டு, அரங்கமே அமைதியாகிவிட்டது. பின்னர், அவரது வேண்டுகோளுக்கிணங்க ரசிகர்கள் அனைவரும் தங்கள் செல்போன் டார்ச்லைட்களை ஒளிரவிட்டனர். அந்த வெளிச்சத்தில் அரங்கம் முழுவதும் பகலாக மாறி, சின்மயியின் அர்ப்பணிப்புக்கும், விடாமுயற்சிக்கும் மரியாதை செலுத்தியது. அந்தத் தருணம், நிகழ்ச்சியின் உச்சகட்ட உணர்வுபூர்வமான காட்சியாக அமைந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.