/indian-express-tamil/media/media_files/2025/09/01/ajith-kumar-exclusive-interview-2025-09-01-16-43-17.jpg)
3 வருஷம் என் கூட இருந்தப்ப நான் மோசடிக்காரன் என்பது தெரியாதா? 'சின்ன மருமகள்' ஸ்வேதா கணவர் ஃபீலிங்ஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சின்ன மருமகள்' சீரியலில் தமிழ்ச்செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஸ்வேதாவின் தனிப்பட்ட வாழ்க்கை தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. ஒரு பக்கம் சீரியலில் குடும்பப் பெண்ணாகக் கவர்ந்து வரும் ஸ்வேதா, இன்னொரு பக்கம் நிஜ வாழ்க்கையில் தன் கணவர் எனக்கூறப்படும் அஜித்குமார் (ஆதி) மீது மோசடிப் புகார்களை அடுக்கடுக்காக வைத்துள்ளார். இதற்குப் பதில் கொடுக்கும் விதமாக ஆதன் சினிமா யூடியூப் சேனலுக்கு அஜித்குமார் கொடுத்த பேட்டி, மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
12-ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்து, டிகிரி வாங்கப் போராடும் தமிழ்ச்செல்வியாக 'சின்ன மருமகள்' சீரியலில் நடித்து வரும் ஸ்வேதாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் 4.5 லட்சம் ஃபாலோவர்ஸ் வைத்துள்ள இவர், தனது காதலர் குறித்து எந்தப் பதிவும் வெளியிட்டதில்லை. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன், ஆதி என்பவருடன் கைகோர்த்து இருக்கும் புகைப்படம் வைரலாகியது.
இந்த விவகாரம் குறித்து அதிர்ச்சி தரும் வகையில் ஒரு விளக்கத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் ஸ்வேதா. "அவன் என் கணவரும் இல்லை, காதலரும் இல்லை. அவன் ஒரு மோசடிக்காரன். போலீஸால் தேடப்பட்டு வரும் நபர்" என்று பகிரங்கமாக அறிவித்தார். மேலும், இருவரும் பிரிந்துவிட்டதாகவும், ஆனாலும் தன் பெயரைப் பயன்படுத்தி அவர் பொய் பேட்டிகள் கொடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
ஸ்வேதாவின் இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஆதி என்கிற அஜித்குமார் யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்தார். அப்போது, "என் பெயர் ஆதி அல்ல, அஜித்குமார். கடந்த 3 வருடங்களாக ஸ்வேதாவுடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறேன். எங்கள் உறவில் ஆழமான பிணைப்பு இருக்கிறது. நான் அவளை ஒருபோதும் அவமானப்படுத்த மாட்டேன்" என்று உருக்கமாகப் பேசினார்.
"நான் ஒரு மோசடிக்காரன் என்றால், கடந்த 3 வருடங்கள் என்னுடன் இருந்தபோது அது தெரியாதா?" என்று ஸ்வேதாவின் குற்றச்சாட்டுக்கு நேரடியாகக் கேள்வி எழுப்பினார் அஜித்குமார். தனது கடந்த காலத்தில் பல தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்ததாக ஒப்புக்கொண்ட அவர், நண்பர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்குத் தானே பொறுப்பு என்றும், அனைத்தையும் சரிசெய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும், விவாகரத்து குறித்துக் கேட்கப்பட்டபோது, "ஸ்வேதா விவாகரத்து கேட்டால், அதற்கு நான் தயார். அது அவளுடைய விருப்பம். அவளை நான் கட்டாயப்படுத்தவோ, துன்புறுத்தவோ விரும்பவில்லை" என்று கூறி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். சின்னத்திரை ரசிகர்களைக் குழப்பத்திலும், பரபரப்பிலும் ஆழ்த்தியுள்ள இந்த மோதலில், உண்மை என்ன என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.