Tamil Serial News: விஜய் டிவி-யில் ஒளிபரப்பான மெளன ராகம் சீரியலை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. அதில் கிருத்திகா, சபிதா, ராஜீவ், சிப்பி ரஞ்சித் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மெளன ராகம் சீரியலில் சக்தியின் அம்மாவாக, அமைதியான அதே நேரம் முக்கியக் கதாபாத்திரத்தில், கற்பகமாக நடித்தார் சிப்பி ரஞ்சித். கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் 1976-ம் ஆண்டு பிறந்த இவர், 1992-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகிய, ‘தலஸ்ட்னானம்’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இருப்பினும் 93-ல் வெளியாகிய ‘பதேயம்’ படம் தான் சிப்பிக்கு முதல் படம், ஆனால் தாமதமாக ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் நடிகர் மம்மூட்டியுடன் நடித்திருப்பார் சிப்பி.
திருவனந்தபுரத்திலுள்ள, நிர்மலா பவன் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், அங்குள்ள மார் இவனியோஸ் கல்லூரியில் கல்லூரி படிப்பையும் முடித்தார் சிப்பி. 1992-ல் திரைத்துறைக்குள் நுழைந்த அவர், மம்மூட்டி, அரவிந்த் சுவாமி, சிவராஜ்குமார், ரமேஷ் அரவிந்த், விஜயகாந்த் போன்ற தென்னிந்திய பிரபலங்களுடனும் நடித்தார்.
தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சிப்பி. இவர் கன்னடத்தில் ஷில்பி என்ற பெயரில் புகழடைந்தவர். ரமேஷ் அரவிந்த் – ஷில்பி கன்னடத்தில் பிரபலமான ஜோடி. தமிழில் விஜயகாந்த் நடித்த ‘தர்மா’ படத்தில் நடித்தார். ஒரு டஜனுக்கும் அதிகமான மலையாள சீரியல்களில் நடித்தவர், மெளனராகம் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமானார். தவிர, சீரியல் தயாரிப்பாளர், ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி, தொகுப்பாளினி, விளம்பரப்பட நடிகை, ரியாலிட்டி ஷோ பங்கேற்பாளர் என பல முகங்கள் சிப்பி ரஞ்சித்துக்கு உண்டு.
கர்நாடக மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் சிப்பி ரஞ்சித் வென்றிருக்கிறார். மலையாள தயாரிப்பாளர் ரஞ்சித்தை திருமணம் செய்துக் கொண்ட இவருக்கு, அவந்திகா என்ற மகளும் உள்ளார். மலையாள நடிகைகள் தமிழில் புகழ் பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் மெளனராகம் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறார் சிப்பி!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.