Christmas Cake Recipe : கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்டது. இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பலரின் வீடுகளிலும், வகைவகையான இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் செய்ய தொடங்கியிருப்பார்கள்.
எத்தனை இனிப்புகள் வந்தாலும், கிறிஸ்துமஸ் கேக் என்பது என்றுமே ஸ்பெஷல் தான். இந்த கிறிஸ்துமஸ் கேக்கை ப்ளம் கேக் என்றும் அழைக்கின்றனர். தற்போதெல்லாம் பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக் அவ்வளவு எளிதாக கடைகளில் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் அதனை வாங்க யோசிக்கின்றனர்.
Christmas Cake Recipe : கிறிஸ்துமஸ் கேக் செய்முறை
சிலருக்கு வீட்டிலேயே செய்துவிடலாம் என தோன்றினாலும், செய்முறை தெரியாமல் தவிக்கின்றனர். அப்படி எந்த குழப்பம் உங்களுக்கு வேண்டாம். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு உங்கள் வீட்டிலேயே நீங்கள் கேக் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
மைதா மாவு -300 கிராம்
பேக்கிங் பவுடர் -3 டீஸ்பூன்
சோடா உப்பு -1/2 டீஸ்பூன்
வெண்ணெய் -200 கிராம்
பொடித்த சர்க்கரை -250 கிராம்
முந்திரிப்பருப்பு -50 கிராம்
உலர்ந்த திராட்சை -50 கிராம்
செர்ரி -50 கிராம்
முட்டை -3
பிஸ்தா பருப்பு -50 கிராம்
சுல்தானாஸ் -50 கிராம்
பட்டை மசாலா தூள் -1 டீஸ்பூன்
கோக்கோ -1 டீஸ்பூன்
பிராண்டி - 4 டேபிள் ஸ்பூன்
போர்டு வைன் - 4 டேபிள் ஸ்பூன்
வென்னிலா எஸ்சென்ஸ் -சில துளிகள்
குறிப்பு : பிராண்டி மற்றும் போர்ட் வைன் உபயோகப்படுத்த வேண்டாம் என நினைப்பவர்கள் பால் -100 மில்லி உபயோகப்படுத்தலாம்.
செய்முறை:
- மைதா மாவு, பேக்கிங் பவுடர், சோடா, உப்பு, பட்டை மசாலா இவைகளை ஒன்றாக கலந்து மூன்று முறை சலிக்கவும்.
- பொடித்த சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழைக்கவும். முட்டைகளை உடைத்து ஊற்றி நுரைக்க அடிக்கவும்.
- குழைத்த வெண்ணை கலவையுடன் அடித்த முட்டை சேர்த்து நன்கு கலக்கவும்.
- மைதா மாவில் ஊற்றி எல்லாம் ஒன்று சேரும்படி ஒரே திசையில் லேசாக அழுத்தம் தராமல் கலக்கவும்.
- இவற்றில் கோக்கோ, பிராண்டி - வைன் (அல்லது பால்) மற்றும் எஸன்ஸ் சேர்த்து கலக்கவும்.
- கடைசியாக செர்ரி பழங்கள், உலர்ந்த திராட்சை, சுல்தானாஸ், முந்திரிப் பருப்பு சேர்த்து பேக்கிங் ட்ரெயில் ஊற்றி ஒவனில் 140 டிகிரி செல்சியஸ்-க்கு பேக் செய்யவும்.
- வெந்ததும் வெளியில் எடுத்து, சூடு ஆறிய பின்னர் எடுத்து விரும்பியபடி அலங்காரம் செய்யலாம்.
குக்கரில் செய்வது எப்படி:
- கனமான குக்கரில் சலித்த தூய்மையான மண்ணை கொட்டி ஒரு சேர சமப்படுத்திக் கொள்ளவும்.
- பின்னர் அதன் மேலே பாத்திரம் வைப்பதற்கு ஸ்டாண்டு போல் ஒன்றை அழுத்தி வைக்கவும்.
- அந்த ஸ்டாண்டின் மேலே கேக் கலவை ஊற்றிய பாத்திரத்தை வைத்து, விசில் போடாமல் மூடவும்.
- அடுப்பை சிம்மில் வைத்து வேக வைக்கவும்.
- ஒரு சிலருக்கு 45 நிமிடத்தில் கேக் முழுமையாக வெந்துவிடும், சிலரின் குக்கர் பதத்திற்கு ஒரு மணி நேரம் கூட ஆகும். பொறுமையோடு இருந்தால் சுவை மாறாமல் அவனில் கிடைப்பது போலவே கேக் ரெடி.