தொடர்ந்து 2 மணி நேரம் தண்ணீரில் சிலம்பம் சுழற்றி 11 வயது கோவை சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.
கோவை சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்தான ராஜா- ராஜேஸ்வரி தம்பதியினரின் மகன் ராஜமுனீஸ்வர் (11). இவர் தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவர் கடந்த சில வருடங்களாகவே சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை பயின்று வருகிறார். இந்நிலையில் சிறுவனக்கு நீச்சலிலும் ஆர்வம் உள்ளதை அறிந்து கொண்ட பயிற்சியாளர் திலீப்குமார், நீச்சல் பயிற்சியும் அளித்துள்ளார்.
மேலும், புதுவித சாதனை படைக்கும் வகையில் சிறுவனக்கு நீரில் சிலம்பம் சுழற்றுவதற்கு பயிற்சி கொடுத்துள்ளார்.
இந்த பயிற்சிகளை முறையாக கற்றுக் கொண்ட மாணவர் ராஜமுனீஸ்வர் இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக நீச்சல் குளத்தில் ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பங்களை சுழற்றி சாதனை புரிந்துள்ளார்.
அதிலும் பல்வேறு விதமான நீச்சல் யுத்திகளை கையாண்டு சாதனையை புரிந்துள்ளார். இவரது சாதனையை Nobel World Record Achiever அங்கீகரித்துள்ளது.



சாதனை புரிந்த மாணவருக்கு சிலம்ப பயிற்சியாளர் திலீப்குமார், நீச்சல் பயிற்சியாளர்கள் சிவராஜகோபாலன், அருள் பாண்டி உட்பட அவரது பெற்றோர்கள் நண்பர்கள் உறவினர்கள் பலரும் பாராட்டினர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”