சிறுவர்களுக்கான பேஷன் ஷோ போட்டி : கோவை சிறுவன் பட்டம் வென்று அசத்தல்
கடந்த 18"ஆம் தேதி துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஜூனியர் மாடல் இன்டர்நேஷனல் (JMI) பட்டத்திற்கான போட்டியில் இந்தியா சார்பாக சிறுவன் திஷன் பங்கேற்றார்.
துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிறுவர்களுக்கான பேஷன் ஷோ போட்டியில் கோவையை சேர்ந்த ஆறு வயது சிறுவன் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
கோவை கணபதி பகுதியை சேர்ந்த சங்கர் மற்றும் சாரதாதேவி ஆகியோரின் ஒரே மகன் திஷன். ஆறு வயதே ஆன திஷன் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 18"ஆம் தேதி துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஜூனியர் மாடல் இன்டர்நேஷனல் (JMI) பட்டத்திற்கான போட்டியில் இந்தியா சார்பாக சிறுவன் திஷன் பங்கேற்றார். இந்தியா, இங்கிலாந்து, இந்தோனேசியா, கென்யா, அமெரிக்கா, துருக்கி,ஈராக் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
இதில் மேற்கத்திய ஆடை, தேசிய பெருமையை பிரதிபலிக்கும் ஆடை, கலாச்சார ஆடை, திறமை கண்டறியும் சுற்று மற்றும் நேர்காணல் போன்ற சுற்றுகளில் அதிக புள்ளிகளை பெற்று வெற்றி பெற்ற சிறுவன் திஷன், இந்த ஆண்டிற்கான "சர்வதேச ஜூனியர் மாடல் 2022" பட்டத்தினை பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பேஷன் ஷோ குறித்து எந்த பின்புலமும் இல்லாத சிறுவன் திஷன் சர்வதேச அளவில் சாதித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இதே போட்டியில் கோவையை சேர்ந்த சிறுவர்களே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“