கோவையில் ஐயப்ப பக்தர்கள் ஒன்றிணைந்து, சபரிமலை ஐயப்பன் கோயிலின் 18 படிகளை போன்று தத்ரூபமாக வடிவமைத்த நிகழ்வு காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கோவை அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் கிளை சார்பாக 12-ஆம் ஆண்டு ஐயப்பன் தேச விளக்கு பூஜை மற்றும் அன்னதான பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, இந்தாண்டு பெருவிழா கடந்த 27-ஆம் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு அஷ்டதிரவிய மகா கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இந்நிகழ்வில், சபரிமலை முன்னாள் மேல் சாந்தி சுதீர் நம்பூதிரி தலைமையில் ஐயப்பனுக்கு படி பூஜை மற்றும் ஸ்ரீ கோவில் பூஜை செய்யப்பட்டது.
இந்நிகழ்வுகள் குறித்து சங்க நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, "12 ஆண்டுகளாக இப்பகுதியில் சிறப்பான முறையில் வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இந்த முறை சபரிமலை போலவே, 18 படிகளை அமைத்து கோயில் எழுப்பி ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தபடுகிறது. மனித நேயத்தை சொல்லி தரும் வழிபாடுகளில் ஐயப்பன் முக்கியத்துவம் பெறுகிறார்" எனத் தெரிவித்தனர்.
தரிசனத்தை தொடர்ந்து ஐயப்ப தேச விளக்கு தேரோட்டம் திருவீதி உலா ஆர்.எஸ்.புரம் பெரிய மாரியம்மன் கோயிலின் முன்பாக பட்டாசுகள் வாண வேடிக்கையுடன் தொடங்கியது.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கையில் விளக்கை ஏந்தியபடி ஊர்வலமாக எடுத்து வந்தனர். அலங்கரிக்கப்பட்ட ஐயப்ப சுவாமியின் ரதத்தின் முன்பாக நாதஸ்வரம், உடுக்குப்பாட்டு, சிங்காரி மேளம், தையம், பூக்காவடி எடுத்து பக்தர்கள் வழிபட்டனர்.
செய்தி - பி. ரஹ்மான்