/indian-express-tamil/media/media_files/2025/06/04/JWA3w2ahulRcujGijNI7.jpg)
கோவை மாவட்டத்தில் 9-வது புத்தக கண்காட்சி ஜூலை 18 ஆம் தேதி கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில் சங்கம் இணைந்து இந்த கண்காட்சியை நடத்துகின்றன.
ஜூன் 3-ஆம் தேதி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கண்காட்சி லோகோ வெளியீட்டு நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் கொடிசியா அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்காட்சியின் லோகோவை வெளியிட்டனர்.
இந்த புத்தக கண்காட்சியில் 280க்கும் மேற்பட்ட அரங்குகளில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சிக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கிய துறையில் சாதனை படைத்த ஒரு சான்றோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், ஒன்றரை லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், பாராட்டு மடலும் இந்த கண்காட்சியில் வழங்கப்படும். மேலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே வாசிப்பு மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் விதமாக குறும்படப் போட்டி நடத்தப்பட உள்ளது. பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர்கள் லிங்கசாமி மற்றும் சரண் ஆகியோர் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று குறும்படங்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இளம் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை சமர்ப்பிக்க ஜூன் 15 ஆம் தேதி கடைசி நாள் என்றும், குறும்பட போட்டிக்கு சமர்ப்பிக்க ஜூன் 30 ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக கண்காட்சியை 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டதாகவும், இந்த முறை ஒரு லட்சம் பார்வையாளர்களை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இந்த ஆண்டு இளம் படைப்பாளர்களுக்கான பயிற்சிகளும், விருதுகளும் அளிக்கப்பட உள்ளதாகவும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளும் நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
அரசு பள்ளி மாணவர்கள் இந்த புத்தக கண்காட்சிக்கு வந்து செல்வதற்கு இலவச பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும், பொதுமக்களுக்கான சிறப்பு பேருந்துகள் பற்றி அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
செய்தி - பி. ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.