கோவை புத்தக திருவிழாவில் வாசகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது திருநங்கை பதிப்பகம். திருநங்கைகள் குறித்த புரிதலை உருவாக்க அவர்களின் புதிய முயற்சியை பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
மாறிய பாலினத்தவர்களின் வலிகள் காலம்காலமாக மாறாமலே இருந்து வருகிறது. இந்த நவீன காலத்திலும் பாலினம் மாறிய திருநங்கைகளையும், திருநம்பிகளையும் ஒதுக்கும் அவலம் தொடர்ந்து தான் வருகிறது. அந்த புறக்கணிப்புகளை மீறி திருநங்கைகளும், திருநம்பிகளும் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்.
அந்த வகையில், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் குறித்த புரிதலையும், விழிப்புணர்வையும் புத்தகங்கள் மூலமாக ஏற்படுத்தும் வகையில் திருநங்கை பிரஸ் எல்எல்பி என்ற பதிப்பகம் துவங்கப்பட்டுள்ளது. கோவை புத்தகத் திருவிழாவில் அரங்கு அமைந்துள்ள இந்த பதிப்பகம், பரவலான கவனத்தை ஈர்த்து வருகிறது. இங்கு திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் எழுதிய கவிதை, கதை உள்ளிட்ட பல்வேறு நூல்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் 7 பேர் இங்கு பணியாற்றி வருகின்றனர். விளிம்பு நிலையில் உள்ள திருநர்கள் குறித்து மக்களிடம் ஒருவித அருவருப்பு, ஒதுக்குதல் இருப்பதாகவும், அதனை தாண்டி சாதிக்க வேண்டும் என்பதற்காக இந்த பதிப்பகத்தை நடத்தி வருவதாக அப்பதிப்பகத்தினர் தெரிவித்தனர்.
2022 ஆம் ஆண்டு முதல் புத்தக ஸ்டால்களில் பணியாற்றி வந்த நிலையில், 2023 ல் சென்னையிலும், தற்போது முதல் முறையாக கோவையிலும் ஸ்டால் அமைத்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். வாசகர்களுக்கு சிறந்த நூல்களை தரும் வகையில் திருநர்கள் குறித்த புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருப்பதாகவும், தற்போது இப்புத்தகங்களுக்கு மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவு அதிகரித்து வருவதாகவும் அவர்கள் கூறினர்
தொடர்ந்து வருடாவருடம் புத்தகத் திருவிழாவிற்கு வந்தாலும் திருநர்கள் குறித்த ஒரு பதிப்பகத்தை திருநர்களே நடத்தி வருவதை முதல் முறையாக பார்ப்பதாகவும், இங்குள்ள பல்வேறு புத்தகங்கள் நன்றாக இருப்பதாகவும் வாசகர்கள் தெரிவித்தனர். இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.