/indian-express-tamil/media/media_files/PZIJAN2xlbzqnRTavY7j.jpeg)
Coimbatore
கோயம்புத்தூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் (CDHA) சார்பில் ‘டேஸ்ட் ஆஃப் கோயம்புத்தூர்’ என்கிற மாபெரும் உணவு திருவிழாவின் 6வது பதிப்பு வரும் ஜனவரி 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இதில் சங்கத்தின் தலைவர் கே.ஏ.ராமசாமி, செயலாளர் பாலச்சந்தர் ராஜு, பொருளாளர் கோவிந்தராஜ் மற்றும் டேஸ்ட் ஆஃப் கோயம்புத்தூர் 2024 நிகழ்வின் தலைவர் டேவிட் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
‘இந்த உணவுத் திருவிழா மாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 10.30 மணி வரை நடைபெறும். இதில் கோவையைச் சேர்ந்த 100 உணவு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
மொத்தம் 160 அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் சைவ மற்றும் அசைவ உணவுகள், இனிப்புகள், கார வகைகள், சாட் எனும் துரித உணவு வகைகள், கேக் மற்றும் ஐஸ்கிரீம் என அனைத்தும் ஒரே இடத்தில் உண்டு மகிழலாம்’, என கே.ஏ.ராமசாமி கூறினார்.
இந்த உணவு திருவிழாவில் அனைத்து அரங்குகளில் உள்ள உணவுகளை மக்கள் உண்டு மகிழ வேண்டும் என்பதற்கேற்ப உணவின் அளவு அமைக்கப்பட்டிருக்கும். விலையும் குறைவாக இருக்கும்.
இந்த உணவு திருவிழா நிச்சயமாக கோவை மக்களுக்கு புதுவித அனுபவத்தை அளிக்கும்.
மேலும் இது நிச்சயம் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக நடைபெறும் என்று நாங்கள் நம்புகிறோம், என அவர்கள் தெரிவித்தனர்.
டேஸ்ட் ஆஃப் கோயம்புத்தூர் 2023 ன் தலைவர் டேவிட் கூறுகையில்,’நுழைவு கட்டணம் விலை ரூ. 249 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு கட்டணம் கிடையாது.
கோயம்புத்தூரில் உள்ள அனைத்து முன்னணி உணவகங்களில் நேரடியாகவும் Book My Show மற்றும் Pa Insider செயலிகள் மூலமாகவும் டிக்கெட்டுகளை பெறலாம்.
3 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியின் டிக்கெட்டுகளை நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் தினமும் பிற்பகல் 2 மணி முதல் கொடிசியா மைதானத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
கோயம்புத்தார் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மில்கி மிஸ்ட் டெய்ரி நிறுவனர் சதீஷ் குமார் ஆகியோர் விழாவைத் தொடங்கி வைக்க உள்ளனர். இந்த நிகழ்வு நடைபெறும் 3 நாட்களும் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்வேதா மோகன், சைந்தவி, சத்யபிரகாஷ் மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீதர் சேனா, ஆஸந்த் அரவிந்தாக்ஷன், நித்ய ஸ்ரீ ஆகியோர் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
மேலும் நமது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான மயிலாட்டம், சிலம்பாட்டம், பறையாட்டம், பொய்கால் குதிரை, கரகாட்டம் போன்ற பல தமிழ் கலாச்சார கலைகளும் இடம்பெற உள்ளது, என தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.