முழங்கால் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 2000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று ஓடினர்.
முழங்கால் வலி மற்றும் அதன் காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், 3 கிலோ மீட்டர், 1.5 கிலோ மீட்டர் என நான்கு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கலந்துகொண்டனர். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளும் சக்கர நாற்காலியில் பங்கேற்றனர். மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
முழங்கால் என்பது மனித உடலை தாங்கும் முக்கிய சக்தியாகும். அத்தகைய முழங்கால் வலியை கட்டுப்படுத்தவும், குறைக்கவும், சிகிச்சையளிக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த மாரத்தான் மூலம் அனைவரும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சுமன் தெரிவித்தார்.
வி.ஜி.எம் மருத்துவமனை மற்றும் தடகள விளையாட்டு சங்கம் சார்பில் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை, மருத்துவர் விஜி மோகன் பிரசாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.