2021-22ம் ஆண்டிற்கான சிறந்த சிலம்பாட்ட கலைஞர் விருது கோவையை சேர்ந்த சிலம்பாட்ட கலைஞருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டு துறை மூலம் வருடம்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் சிறந்த சிலம்பாட்ட கலைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
அதன்படி 2021-22ம் ஆண்டிற்கான சிறந்த சிலம்பாட்ட கலைஞர் விருது கோவையை சேர்ந்த நந்தகுமார் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கோவை தனியார் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த விருதினை வழங்கினார். இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விருதினை பெற்றுள்ள நந்தகுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிலம்பம் மற்றும் தற்காப்பு துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். பல்வேறு மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பதக்கங்களை பெற்றுள்ளார்.
சிலம்பம், வாள்வீச்சு, சுருள்வாள், மான்கொம்பு, வேல்கம்பு, களரி, வர்மம், குஸ்தி, போன்ற தற்காப்பு கலைகளை முறையாக கற்ற கொண்ட இவர் 2013 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்பம் போட்டியில் இந்திய அணிக்காக இரண்டு வெண்கல பதக்கங்களை பெற்றவர்.
2019 ஆம் ஆண்டு இந்திய கலாச்சார மற்றும் நட்புறவு துறை மற்றும் ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி இணைந்து இவருக்கு “சிலம்பச்செல்வன்” என்ற விருதுணையும் வழங்கி சிறப்பித்துள்ளது. மேலும் இவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்களும் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“