சூலூரில் நடைபெற்ற காவல்துறை அதிகாரியின் இல்ல திருமண நிகழ்வில் மதகுருமார்கள் இணைந்து சிவபுராணம் மற்றும் திருக்குர்ஆன் ஓதி மணமக்களை வாழ்த்திய சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழக காவல்துறையில் கோவை மாவட்ட குற்ற ஆவண காப்பக துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் வெற்றிச்செல்வன்.
முன்னதாக இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு எஸ்.ஐ.சி எனப்படும் மதம் சார்ந்த பிரச்சனைகளை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப்பி பிரிவில் பணியாற்றி வந்தார்.
காவல்துறையில் எஸ்.ஐ.சி அமைப்பில் கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்தபோது மதம் சார்ந்த பிரச்சனைகளை சிறப்பாக கையாண்டு பிரச்சனைகளை சுமூகமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் வெற்றிச்செல்வன்.
இதற்காக ஜனாதிபதி விருது மற்றும் அண்ணா விருதைப் பெற்றுள்ளார். இதனிடையே எம்மதமும் சம்மதம் என்ற எண்ணத்தில் மும்மத குருமார்கள் முன்னிலையில் தனது மகளின் திருமணத்தை நடத்தியுள்ளார் டிஎஸ்பி வெற்றிச்செல்வன்.

வெற்றிச்செல்வனின் மகள் நிஷாந்தினி. பி.எஸ்.டி படித்து வரும் இவருக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த சுதர்சன் என்பவருக்கும் கோவை சூலூர் பகுதியில் தனியார் அரங்கில் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.
இதில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார், கௌமார மடாலயம் குருமகா சந்நிதானம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், காமாட்சி புரி ஆதீனம் ஞானகசாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கோவை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்விவினாஸ் மற்றும் போத்தனூர் இமாம் மஸ்ஜிதே இப்ராஹிம் சுன்னத் ஜமாஅத் தலைவர் மெளவி அல்லாஜ் அப்துல் ரஹீம் இம்தாதி பாகவி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், காவல்துறை இயக்குநர்கள் ஏ.கே.விஸ்வநாதன், சீமா அகர்வால், கூடுதல் இயக்குநர் அமல்ராஜ் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அப்போது மணமேடையில் மதகுருமார்கள் சிவபுராணம் மற்றும் திருக்குர்ஆன் ஓதி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த காட்சிகள் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
காவல்துறை அதிகாரி ஒருவர் மதங்களைக் கடந்து மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று முனைப்பு காட்டியிருப்பது, காவல்துறை வரலாற்றிலேயே புதுமையாக உள்ள நிலையில் இவரின் மத நல்லிணக்கத்திற்கு பொதுமக்கள் மற்றும் சக போலீசார் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
மும்மதங்களை சேர்ந்த குருமார்களின் பெயர்களுடன் அச்சடிக்கப்பட்ட இவர்களது திருமண பத்திரிக்கை ஏற்கனவே வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“