கோவையில் மூன்று மதங்களைச் சேர்ந்த குருமார்கள் முன்னிலையில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வீட்டு கல்யாண பத்திரிக்கை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழக காவல்துறையில் கோவை மாவட்ட குற்ற ஆவண காப்பக துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் வெற்றிச்செல்வன். முன்பாக இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு எஸ்.ஐ.சி எனப்படும் மதம் சார்ந்த பிரச்சனைகளை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப்பி பிரிவில் பணியாற்றி வந்தவர்
காவல்துறையில் எஸ்.ஐ.சி அமைப்பில் கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்த போது மதம் சார்ந்த பிரச்சனைகளை சிறப்பாக கையாண்டு பிரச்சனைகளை சுமூகமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

பல பிரச்சினைகளின் போது துரிதமாக செயல்பட்டு கலவரங்களை தடுத்தும் கட்டுப்படுத்தியும் உள்ளார். இதற்காக ஜனாதிபதி விருது மற்றும் அண்ணா விருதைப் பெற்றவர்.
அந்தவகையில், வெற்றி செல்வன் எம்மதமும் சம்மதம் என்ற எண்ணத்தில் தனது மகளின் திருமணத்தை நடத்த முடிவெடுத்திருக்கிறார்.
இவரது மகள் நிஷாந்தினி. பி.எஸ்.டி படித்து வரும் இவருக்கு திருநெல்வேலியைச் சேர்ந்த சுதர்சன் என்பவருடம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களது திருமணத்தை மதத்தை கடந்து நடத்த வெற்றிச்செல்வன் முடிவெடுத்தார்.



அதன்படி பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார், கௌமார மடாலயம் குருமகா சந்நிதானம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், காமாட்சி புரி ஆதீனம் ஞானகசாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கோவை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்விவினாஸ் மற்றும் போத்தனூர் இமாம் மஸ்ஜிதே இப்ராஹிம் சுன்னத் ஜமாஅத் தலைவர் மெளவி அல்லாஜ் அப்துல் ரஹீம் இம்தாதி பாகவி ஆகியோருக்கு திருமண அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மும்மதங்களை சேர்ந்த குருமார்களின் பெயர்களும் திருமண பத்திரிக்கையில் அச்சிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த பத்திரிக்கை சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது.
காவல்துறை அதிகாரி ஒருவர் மதங்களைக் கடந்து மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று முனைப்பு காட்டியிருப்பதற்கு பொதுமக்கள் மற்றும் சக போலீசார் வரவேற்பையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்த திருமண நிகழ்வானது வரும் 24 மற்றும் 25 அகிய தேதிகளில் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருமண மண்டபத்தி நடைபெற உள்ளது.
இதில் காவல்துறை இயக்குநர்கள் ஏ.கே.விஸ்வநாதன், சீமா அகர்வால், கூடுதல் இயக்குநர் அமல்ராஜ் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“