பஞ்சாப் மாநிலத்தில் விளையும் பொருட்களை கொண்டு தயாரான பஞ்சாபி உணவு திருவிழா, கோவை மக்களை வெகுவாக கவர்ந்தது.
கோவையை அடுத்த நவக்கரை பகுதியில் தனியார் கல்லூரி உணவுத்துறை அறிவியல் மற்றும் உணவக மேலாண்மைத்துறை சார்பாக இந்திய உணவுகளின் பாரம்பரிய சிறப்பை எடுத்து காட்டும் விதமாக கிச்சன் கார்னிவல் எனும் உணவு திருவிழா நடைபெற்றது.
”ஓயே பஞ்சாபி உணவுத்திருவிழா” எனும் தலைப்பில் நடைபெற்ற இதில் பஞ்சாப் மாநிலத்தின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார சிறப்புகளை எடுத்து கூறும் விதமாக பல்வேறு உணவுகள் தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டன.
மேலும் ஆரோக்கிய உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்தியாவில் விளையும் மைக்ரோகிரீன்கள் மற்றும் சிறுதானியங்களால் செய்யப்பட்ட பல்வேறு உணவுகள் மற்றும் அதுகுறித்த பயன்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
உணவு திருவிழாவில் பஞ்சாப் மாநிலத்தின் பாரம்பரிய உணவுகளாக சாலட், சட்னி வகைகள், தந்தூரி வகை ரொட்டிகள், ரைத்தா எனும் தயிர் உணவுகள், இனிப்பு குறிப்பாக அசைவ உணவு வகைகளாக வறுத்த சிக்கன், அங்கார சிக்கன், பட்டியாலா தவா மீன் உள்ளிட்ட என பல்வேறு உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
பஞ்சாப் மாநிலத்தின் பாரம்பரிய ஆடை அலங்கார அணிவகுப்பு, நடனம், இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் பஞ்சாப் உணவு அருந்தியபடி ரசித்தனர்.
மாலை துவங்கிய உணவு திருவிழாவில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“