பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Coimbatore | Rain In Tamilnadu: கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் வெயில் அதிகம் இருந்தாலும் பிற்பகல், மாலை, மற்றும் இரவு நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நள்ளிரவிலும் சில பகுதிகளில் தொடர் மழை பெய்வதால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில், கோயம்புத்தூர் மாநகரப் பகுதியில் இன்று பரவலாக கோடை மழை பெய்தது. கோவை வடக்கு பகுதிகளான துடியலூர், கவுண்டம்பாளையம், தடாகம் சாலை மற்றும் உக்கடம், காந்திபுரம், அவிநாசி சாலை ஆகிய பகுதிகளில் இன்று சுமார் ஒரு மணி நேரம் வரை கனமழை பெய்தது.
குறிப்பாக, உக்கடம் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனை மொட்டைமாடியில் நனைந்தபடி குழந்தைகள் ரசித்தனர். தொடர்ந்து ஆங்காங்கே தூரல் மழை பெய்து வருவதால் இன்று நள்ளிரவும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் வெப்பமாகவும், மாலை மற்றும் இரவு நேரங்களில் குளுமையாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“