தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு கலைகளில் வாள் கேடய வீச்சு முக்கிய விளையாட்டாகும். அழிந்து வரும் இந்த பாரம்பரிய கலைகளை பாதுகாக்கும் விதமாக கோவையில் தொடர்ந்து சிறுவர் சிறுமிகள் தமிழ் பாரம்பரிய கலைகளில் உலக சாதனை புரிந்து வருகின்றனர்.
அந்தவகையில் கோவை முல்லை தற்காப்பு கலை மற்றும் பயிற்சி மையம் சார்பில் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப் பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவி சஞ்சவி (9) கலந்து கொண்டு சாதனை புரிந்தார். கோவையை சேர்ந்த கார்த்திக், லாவண்யா தம்பதியரின் மகளான 4-ம் வகுப்பு படிக்கும் சஞ்சவி இரண்டரை கிலோ எடை கொண்ட வாள் கேடய வீச்சை தொடர்ந்து 3 மணி நேரம் 9 நிமிடங்கள் 5 விநாடிகள் சுற்றி இந்தியா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பிடித்தார்.

இந்தியா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு, அமெரிக்கன் மற்றும் யுரோப்பியன் என மூன்று உலக சாதனை புத்தகங்களும் சஞ்சவியின் சாதனையை அங்கீகரித்து பதக்கம், சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கி கௌரவித்தது. இந்தியா உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் சதாம் ஹீசேன் மற்றும் நடுவர்கள் பாலாஜி, பிரதீபா ஆகியோர் பதக்கங்களை வழங்கினர். அந் நிறுவனத்தின் கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ்ராஜ் சஞ்சவிக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மேலாளர் கார்த்திக், துணை பயிற்சியாளர்கள், முல்லை தற்காப்புக் கலை மற்றும் விளையாட்டுக் கழக மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மாணவியை வாழ்த்தினர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/