இப்படியும் ஓர் உயர்ந்த உள்ளம்: அரசுப் பள்ளி மாணவர்களை உயரே பறக்க வைத்து ஆனந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர்!
விமானத்தில் மாணவர்களுடன் சென்ற ஆசிரியர்கள் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் அந்த படங்களை பகிர்ந்தனர். இதனை பார்த்த மக்கள் ஊராட்சி தலைவரை பாராட்டி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிக்காரம்பாளையம் ஊராட்சி உள்ளது. இதன் ஊராட்சி தலைவராக ஞானசேகரன் உள்ளார். இவர் ஊராட்சியிலுள்ள இளைஞர்களின் கல்வி திறனை ஊக்குவிக்கவும், விளையாட்டு திறனை அதிகரிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்.
Advertisment
இதன் ஒருகட்டமாக அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள், விமானத்தில் பயணம் செய்வது என்பது கனவாக மட்டுமே இருந்தது.
இதனை நிறைவேற்றும் விதமாக சிக்காரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கண்ணார்பாளையம் அரசு பள்ளியை சேர்ந்த மாணவ - மாணவிகள் - ஆசிரியைகள் உள்பட மொத்தம் 110 பேரை கொரோனா பேரிடர் காலத்திற்கு முன்பு கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்று வந்தார்.
இதனை தொடர்ந்து மீண்டும் கடந்த வாரம் அவர் அதே பள்ளி மாணவர்களுடன், பெற்றோரையும் கோவை முதல் சென்னை வரை, 110 பேரை விமானத்தில் அழைத்து சென்றார்.
சென்னையில் மெட்ரோ ரெயில், எலக்ட்ரிக் ரெயில் உள்ளிட்டவற்றிலும் அவர்களை அழைத்துச்சென்று மகிழ்ச்சிப்படுத்தினார்.
விமானத்தில் மாணவர்களுடன் சென்ற ஆசிரியர்கள் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் அந்த படங்களை பகிர்ந்தனர். இதனை பார்த்த மக்கள் ஊராட்சி தலைவரை பாராட்டி வருகின்றனர்.
மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் எங்களுக்கு எவ்வளவோ கனவுகள் உண்டு. இதில் எங்கள் பள்ளிகளுக்கு வரும் சில தன்னார்வலர்கள், எங்களுக்கு புத்தாடை நோட்டு, புத்தகம் மற்றும் கல்வி உதவித்தொகைகளை வழங்கி வந்தனர்.
ஆனால் சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் எங்களுக்கு அனுபவரீதியாக எது தேவையோ அதை செய்து வருகிறார். விமானத்தில் சென்று வந்தது புது அனுபவமாக இருந்ததாக விமானத்தில் பயணித்த மாணவர்கள் தெரிவித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“