ரமலான் பண்டிகையை முன்னிட்டு கோவை, கோட்டைமேடு பகுதியில் இயங்கி வரும் முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக பூசணிக்காய் மிட்டாய் அல்வா தயார் செய்யப்படுகிறது. இந்தப் பணியை சுமார் 50 ஆண்டுகளாக முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கத்தினர் செய்து வருகின்றனர்.
இதன் சிறப்பம்சமாக திருநங்கைகள் மட்டுமே பூசணிக்காய் மிட்டாய் அல்வாவை தயார் செய்கின்றார்கள். ஒரு வாரத்திற்கு முன்பாக வெண்பூசணிக்காயை வெட்டி, மூன்று நாட்களுக்கு வேகவைத்து, அந்த பூசணிக்காயில் உள்ள தண்ணீரை வடிகட்டி நீக்கி விடுவார்கள். பின்னர், பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை, நெய், அத்திப்பழம், இனிப்பு உள்ளிட்ட பொருட்களை இதனுடன் சேர்த்து தயாரிக்கின்றனர்.
கோவையில் மட்டுமே பிரத்தியேகமாக கிடைக்கும் இந்த பூசணிக்காய் மிட்டாய் அல்வாவை, இஸ்லாமியர் உள்ளிட்ட பலரும் வாங்கி தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். வெளிநாடுகளுக்கும் இந்த மிட்டாயை பார்சல் செய்கின்றனர். அதன்படி, ஒரு கிலோ ரூ. 450 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அல்வாவின் விற்பனை, இரண்டு நாட்களில் தொடங்குகிறது.
இதன் விற்பனை மூலமாக பெறப்படும் தொகை குழந்தைகளின் கல்வி, ஏழை பெண்களின் திருமணம், முதியவர்களின் மருத்துவ செலவுகளுக்கு பலனளிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இதனால் மக்கள் பலரும் இதனை விரும்பி வாங்கின்றனர்.
செய்தி - பி. ரஹ்மான்